Last Updated : 21 Oct, 2022 07:13 PM

1  

Published : 21 Oct 2022 07:13 PM
Last Updated : 21 Oct 2022 07:13 PM

மத முறைப்படி திருமணம் நடந்ததை உறுதி செய்த பிறகே பதிவு செய்ய வேண்டும்: சார் பதிவாளர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை.

மதுரை: 'மணமக்கள் சார்ந்த மத முறைப்படி திருமணம் நடைபெற்றதை உறுதி செய்த பிறகே திருமணங்களை பதிவு செய்ய வேண்டும்’ என சார் பதிவாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மேலப்பாளையம் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். என் உறவினர் அப்துல் ஹமீது. 14.8.2014-ல் நான் கல்லூரியில் இருந்தேன். அப்போது அப்துல் ஹமீது கல்லூரிக்கு வந்து, என் தாயார் கீழே விழுந்து விட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார். அதை நம்பி அவருடன் காரில் சென்றேன். அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் பாளையங்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு என்னை கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுத்தனர். என் பெற்றோரை கொலை செய்வதாக மிரட்டி பதிவு ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர்.

பின்னர், எனக்கும், அவருக்கும் பாளையங்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் 1.6.2014-ல் திருமணம் நடைபெற்றதாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதாக கூறினார். போலி திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை ஐஜி ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை ரத்து செய்யவில்லை. எனவே, போலி திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு: ''எந்த மதத்தை பின்பற்றக்கூடிய நபராக இருந்தாலும், அவரவர் சார்ந்த மத முறைப்படி திருமணம் நடைபெற்றால் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். குறிப்பிட்ட மதத்தின் திருமண முறைகளை பின்பற்றாமல் திருமணம் நடைபெற்றால் அந்த திருமணத்தை நேரடியாக பதிவு செய்ய முடியாது.

தமிழ்நாடு திருமண பதிவு சட்டப்படி, திருமண பதிவு விண்ணப்பத்தில் ஜமாத் பெயர், அதன் முகவரி இடம் பெற்றிருக்க வேண்டும், விண்ணப்பத்தில் திருமணம் செய்தவர்களின் ஒப்புதல் இருக்க வேண்டும், இருவருக்கும் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த ஆவணங்கள் இடம் பெற வேண்டும். இவற்றை உறுதி செய்ய பிறகே திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

திருமணத்தை நடந்ததை உறுதி செய்யாமல் வழங்கப்படும் திருமண பதிவு சான்றிதழ்கள் போலியானதாகவே கருதப்படும். இஸ்லாமியர்களை பொறுத்தவரை குறிப்பிட்ட ஜமாத்தில் அனுமதி பெற்று, அவர்களின் மத முறைப்படி திருமணம் நடைபெற்றால் மட்டுமே பதிவு செய்ய முடியும். திருமண பதிவுக்காக வரும் தம்பதிகள் சட்டப்படி திருமணம் நடைபெற்ற பிறகே திருமணத்தை பதிவு செய்ய வருகிறார்களா என்பதை பதிவுத்துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரருக்கு இஸ்லாமிய சட்டப்படி திருமணம் நடைபெறவில்லை. இதனால் மனுதாரருக்கு திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்ய சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது. திருமண பதிவு பதிவை பதிவுத்துறை ஆவணங்களில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x