Published : 17 Oct 2022 04:01 PM
Last Updated : 17 Oct 2022 04:01 PM
புதுச்சேரி: “நான் யாரை சந்திக்கிறேன், தீவிரவாதிகளையா? மக்களைத்தானே. இதில் நாராயணசாமிக்கு என்ன பிரச்சினை?” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுச்சேரி பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பயன்பாடு குறித்த கருத்தரங்கினை இன்று நடத்தின. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கினை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''மக்களுக்காகத்தான் எந்த அலுவலகமுமே. மக்களை பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று தலைவரோ, பொது வாழ்வில் இருப்பவர்களோ சொன்னால் இதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும். எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லும் அதிகாரத்தை, நாராயணசாமிக்கு யார் கொடுத்தது. ஆளுநர் மக்களின் பிரச்சினைகளை அனுசரணையோடு கேட்பதற்கு யாரும் தடை சொல்ல முடியாது. மக்களுக்கு குறைகள் இருந்தால் அவர்களை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது.
இதனை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன், அவர்கள் எனக்கு பதில் சொல்லட்டும். இதற்கு இங்குள்ள முதல்வர் தடை சொல்வது போல் எனக்கு தெரியவில்லை. தடையும் சொல்லமாட்டார். அன்றைய ஆளுநர், இன்றைய ஆளுநரிடம் பிரச்சினை செய்வேன், முதல்வராக இருந்தாலும், முன்னாள் முதல்வராக இருந்தாலும் பிரச்சினை செய்வேன் என்று கூறி நாராயணசாமி சென்றுகொண்டிருக்கும் பாதை சரியா என்று அவரே புரிந்து கொள்ளட்டும். மக்களை சந்திப்பைதை தடுக்க முடியாது.
நீதிமன்றமும் அப்படி சொல்லவில்லை. இது மக்களுக்கான உதவி என்பது எல்லோருக்கும் தெரியும். தெலங்கானாவிலும் நான் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அங்கு மக்கள் என்னை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அரசுக்கும், எங்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. நேராக அங்குள்ள முதல்வர், மத்திய அரசை எதிர்க்கிறார். அவர் எங்களையெல்லாம் மத்திய அரசின் பிரதிநிதியாக பார்க்கும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அதுமட்டுமின்றி நான் சில பணியாற்றும்போது அவருக்கு தொந்தரவாக இருக்கிறது. அவ்வளவு தானே தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை. நாராயணசாமி ஏன் இதனை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார். ஒருவருக்கு தீர்வு கிடைத்தாலும் நல்லது தானே. இதனை ஏன் எதிர்க்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் நலனை விட, இவர்களின் ஈகோதான் பெரிதாக உள்ளது. நான் யாரை சந்திக்கிறேன், தீவிரவாதிகளையா? மக்களைத்தானே. இதில் அவர்களுக்கு என்னதான் பிரச்சினை. ஆளுநர் என்றாலே நாராயணசாமிக்கு அலர்ஜியாகிவிடுகிறது.
கரோனா 3 ஆண்டுகள் நம்மை முடக்கிப் போட்ட நிலையில் இருந்து, உலகத்தில் பல நாடுகள் பொருளாதாரத்தை மீட்டெக்க முடியாத சூழ்நிலையில் நமது பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாய்வார்த்தைக்கும், அரசியலுக்கு வேண்டுமானால் பொருளாதார வீழ்ச்சி என்று பேசலாம். என்னை பொருத்தமட்டில் நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இணையதளத்தில் எனது படத்தை வைத்து என்னை பற்றி சில விமர்சனங்கள் செய்வதும், தவறாக பயன்படுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எனது புகழுக்கு இழுக்கு சேர்க்கும் அளவுக்கு இவர்கள் அதனை செய்கிறார்கள். நான் உண்மையாக இருக்கும் வரை எதைப்பற்றியும் கவலைப்பட போவதில்லை. மக்களை சந்திப்பதும், இதுபோன்ற விமர்சனங்கள் வந்தாலும், மக்களுக்காக நேரடியாக எனது பணி தொடரும்.
புதுச்சேரியில் முறைகேடு நடந்துள்ள இடங்களில் அதிகாரிகளை நீக்கியுள்ளோம். முறைகேடு தொடர்பாக விசாரணைகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம். ஆகவே இங்கு நேர்மையான ஆட்சிதான் நடக்கிறது'' என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT