Published : 03 Oct 2022 06:16 AM
Last Updated : 03 Oct 2022 06:16 AM

தீபாவளி முதல் தொடங்குகிறது செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் சேவை: வரலாற்று சிறப்பு இடங்களை காண வசதி

தென்காசி: செங்கோட்டையில் இருந்து மதுரை, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறைக்கு தீபாவளி முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்க உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வரும் 16847/16848 ரயிலையும், மதுரை - செங்கோட்டை இடையே இயங்கி வரும் 06665/06662 ரயிலையும் ஒன்றாக இணைத்து, ஒரே ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 24 தீபாவளி முதல் மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் 16847 சேவை தொடங்குகிறது. மயிலாடுதுறையில் இருந்து இந்த ரயில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் 16848 செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.

இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 14 பெட்டிகளுடன் இயங்கும்.

வரலாற்று சிறப்பு இடங்கள்: செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் பயணிக்கும் வழித்தடத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. செங்கோட்டையை சுற்றியுள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா தலங்கள், பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சங்கர நாராயண சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல்லில் இறங்கி பழனி முருகன் கோயில், திருச்சி மலைக்கோட்டை மற்றும் சுற்றுலா தலங்கள் தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஆன்மிகத் தலங்கள் என, பல்வேறு சிறப்புகள் கொண்ட ஊர்களுக்கு செல்ல வசதி ஏற்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மக்களுக்கு வசதி: இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, “தென்மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக இந்த செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து திருத்தங்கல் வரை உள்ள ரயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் தற்போது திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்ல ரயில் வசதி கிடைத்துள்ளது. இதேபோல் டெல்டா மாவட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வருவதற்கு வசதியாக இருக்கும். குற்றாலம் வருவதற்கும், தென்காசியில் இறங்கி சபரிமலை செல்வதற்கும் நல்ல வசதி ஏற்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x