Published : 03 Oct 2022 06:14 AM
Last Updated : 03 Oct 2022 06:14 AM

வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு திட்ட செயல்பாடுகளில் தமிழகம் முதலிடம்: குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றார் அமைச்சர் நேரு

‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இதற்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து தமிழக அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக் கொண்டார். உடன், துறை செயலர் சிவ்தாஸ் மீனா.

சென்னை: ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயிர் நீர் இயக்க (ஜல் ஜீவன்மிஷன்) திட்டத்தின்கீழ் 60 சதவீதத்துக்கும் குறைவான குழாய்இணைப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஒட்டுமொத்தமாக தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ளவீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி வருவதற்கு தமிழக அரசு முதல் பரிசு பெற்றுள்ளது. இதற்கான விருதை, டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.

தமிழக ஊரகப் பகுதிகளில் 1.25 கோடி வீடுகளில் இதுவரை 69.14 லட்சம் அதாவது 55 சதவீத வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 55.79 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் தற்போது இத்திட்டத்தின்கீழ் ரூ.18,000 கோடி அளவுக்கு 42 புதிய குடிநீர் திட்டங்களுக்கும், 56 குடிநீர் திட்டங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சில பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மேலும் 2 ஆண்டுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை நீட்டிக்க, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரிடம் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரை நகராட்சிநிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று சந்தித்தார். அப்போது காவிரி, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ள இடங்களின் அருகில் தடுப்பணைகள் கட்ட ரூ.2,400 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களில் தானியங்கு முறையில் இயந்திரங்களை நிறுவி விரைவாக குடிநீர் வழங்க ரூ.500 கோடி நிதி வேண்டும். மழைக்காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆற்றின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுத்து, அருகில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்ப, ரூ.700 கோடி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர் முன்வைத்தார். நிகழ்வில், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் வி. தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பி. பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x