Published : 23 Sep 2022 07:08 AM
Last Updated : 23 Sep 2022 07:08 AM
தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், ரவீந்திர பாரதி குளோபல்’ என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை, இப்பள்ளிக்கு சொந்தமான மினி வேன், பெருங்களத்துார், கிருஷ்ணா நகர் பகுதிகளில் இருந்து, மாணவிகளை ஏற்றிக்கொண்டு, பள்ளிக்கு சென்றது.
பள்ளிக்கு அருகே சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடையில் வாகனம் ஏறி, இறங்கியது. அப்போது, வாகனத்தின் பின்புறம் இருந்த அவசர கால கதவு திடீரென உடைந்து, கீழே விழுந்தது.
அப்போது, அந்த இருக்கையில் அமர்ந்திருந்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த ரியோனா (11) என்ற ஏழாம் வகுப்பு மாணவி வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அம்மாணவிக்கு நான்கு பற்கள் உடைந்தன.
அவ்வழியாக சென்றவர்கள், காயமடைந்த மாணவியை மீட்டு, பெருங்களத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், வாகன ஓட்டுநர் வெங்கட்ராமனை பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளி வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர். பீர்க்கன்காரணை போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
சம்பவம் நடந்த போது, பின்னால் வாகனம் எதுவும் வராததால், மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், கதவு உடைந்து, அவ்வழியாக சென்ற கார் மீது விழுந்ததில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT