Published : 20 Oct 2016 12:47 PM
Last Updated : 20 Oct 2016 12:47 PM

மும்பை திரைவிழாவில் பங்கேற்ற புனிதா குறும்படம்: உதகை பேராசிரியரின் கைவண்ணம்

மும்பையில் நடந்த திரை விழாவில், உதகை அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர், தூய்மையை வலியுறுத்தி மாணவர்களைக் கொண்டு தயாரித்த ‘புனிதா’ என்ற குறும்படம் பங்கேற்றது.

‘தூய்மை பாரதம்’ என்ற திட்டம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர், பிரதமர் தொடங்கி வைத்ததை அடுத்து, அரசு மட்டுமின்றி தன்னார்வ அமைப்புகளும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

தூய்மை பாரதம் திட்டத்துக்கு தனது பங்காக உதகை அரசு கலைக்கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர், மாணவர்களை கொண்டு ‘புனிதா’ என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார்.

அவரே இயக்கியுள்ள இந்த குறும்படத்தில் முக்கிய பாத்திரமான ‘புனிதா’ ஒரு பள்ளி மாணவி. ஏட்டில் உள்ள கல்வியை செயல்பாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்த குறும்படத்தின் கருப்பொருளாகும்.

ஒரே நாளில் தயாரிப்பு

மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய 'புனிதா' குறும்படம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்டது.

படத்தை ஒளிப்பதிவு செய்த ஆர்.சதீஷ்குமார், படத்தொகுப்பாளர் ஜேக்கப் ஜாக், இசையமைப்பாளர் கவின்வண்ணன் அனைவருமே நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் உள்ள முள்ளிமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படமாக்கப்பட்டுள்ளது. அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமே கதாபாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர்.

படத்தை இயக்கிய உதவிப் பேராசிரியர் போ.மணிவண்ணன் கூறியதாவது:

பள்ளி வளாக தூய்மை குறித்து ஆசிரியரால் மனமாற்றத்துக்கு ஆளான 8-ம் வகுப்பு சிறுமி, தான் செல்லும் இடங்களில் தூய்மையை கடைபிடிப்பவளாக மாறி, மற்ற மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார். இவரது சேவையைப் பாராட்டி பள்ளி ஆண்டு விழாவில் 'சிறந்த தூய்மை மாணவி' எனும் விருது வழங்கப்படுகிறது.

இதுவே படத்தின் கரு. தூய்மை செய்யும் நல்ல பொறுப்புள்ள மாணவி என்பதால் அக்கதாபாத்திரத்துக்கு ‘புனிதா' என்று பெயர் சூட்டியிருப்பது கதைக்கு அவ்வளவு அழுத்தமாக அமைந்துள்ளது.

பள்ளி, ரயில் நிலையம் ஆகிய இரு இடங்களில் மட்டும் நடக்கும் கதை.

180 விநாடிகள் மட்டுமே நகரும் இப்படத்தில் 120 காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

அரிதாரங்கள் இல்லை, பெரிய அளவிலான தொழில்நுட்பக் கருவிகள் இல்லை, கை தேர்ந்த தொழில்முறை கலைஞர்கள் இல்லை, செயற்கை வடிவமைப்பு மாதிரிகள் இல்லை, இப்படியான ‘இல்லை’களைக் கொண்டு ஓர் இயல்பான படத்தைத் தர முடியும் என்பதை இப்படக்குழுவினர் நிரூபித்துள்ளனர்.

தேசிய திரைப்பட மேம்பாட்டு அமைப்பு மூலம் கடந்த 2-ம் தேதி மும்பையில் நடந்த (NFDC- Mumbai) திரை விழாவில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து இந்த குறும்படம் பங்கேற்றது.

இந்த குறும்படம் ஆக்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தூ.கணேசமூர்த்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

தூய்மையை வலியுறுத்திய இந்த நல்ல ஆக்கத்தை நீலகிரி மாவட்டத்தின் அனைத்து அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதே சிறந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் உதவ வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x