Published : 01 Sep 2022 11:37 AM
Last Updated : 01 Sep 2022 11:37 AM

அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின்

கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் நடந்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்:" எப்போதும் மக்கள் மனுக்களை கொடுக்கும்போது, ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், அதே மக்கள் என்னிடத்தில் மனுக்களை கொடுக்கும்போது, மகிழ்ச்சியோடு பூரிப்போடு, நம்பிக்கையோடு கொடுத்தவிட்டு நன்றி கூறுகின்றனர். இன்று மனுகொடுத்த பின்னர் மக்களிடத்தில் நம்பிக்கை வந்திருக்கிறது என்றால், அதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு " உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் பயணத்தை நான் நடத்தினேன். அந்த பயணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றேன். நிகழ்ச்சி மேடையில், ஒரு பெட்டி வைக்கப்பட்டிருக்கும், மக்கள் மனுக்களை அந்த பெட்டியில் போடலாம். அதேபோல், நிகழ்வு நடந்த இடத்தின் நுழைவுவாயிலில் இளைஞர்கள் அமர்ந்து, மனுக்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து அதன்பின்னர்தான் அந்த மனுக்கள் பெட்டிக்கு வந்து சேர்ந்தன.

அப்போது மக்களிடம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவைப்பேன் என்று நான் உறுதியளித்தேன். ஆட்சிக்குவந்த பிறகு அந்த பெட்டிகள் அனைத்தும் கோட்டைக்கு வந்தன. அதற்காக ஒரு துறையை உருவாக்கி, அந்த துறைக்கென்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். ஒரு குழு நியமிக்கப்பட்டு, மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, எந்தெந்த பணிகளை எல்லாம் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு நிறவேற்றப்பட்டது. அந்த மனுக்களில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அரசியல் நோக்கத்தோடு அல்ல, இப்போதுகூட ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். 234 தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிட்டு முதல்வருக்கு அனுப்பி வைத்தால் அதுவும் தீர்த்துவைக்கப்படும் என்று உறுதி மொழி கொடுத்து, அது எடப்பாடி பழனிசாமி கொகுதியாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்த்துவைப்போம் என்று கூறியிருக்கிறோம். இதுதான் திமுக, இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக அவர்கள் கட்சியிலேயே கூறினார்கள். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில், ஜெயலலிதா சமாதியில் போய் அமர்ந்துகொண்டு ஆவியோடு பேசுகிறேன் என்றுகூறி அமர்ந்தார். அங்கு சென்று தியான செய்து நீதி கேட்டார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரே கூறினார். அவரை சரி செய்ய வேண்டும் எனபதற்காக ஒரு ஒப்புக்காக ஒரு கமிஷன்.அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் சும்மா ஒப்புக்காக நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் அறிவித்தோம், ஆட்சிக்கு வந்தால், கமிஷனை முறையாக நடத்தி, முறையாக அறிக்கையைப் பெற்று முறையான நடவடிக்கையை இந்த ஆட்சி எடுக்கும் என்று உறுதியளித்தோம்.

ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அந்த அறிக்கையை என்னிடத்தில் கொடுத்தார். அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் இருக்கு அதுகுறித்து இப்போது நான் கூறமாட்டேன். சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைக்கிறோம், எங்களுக்குள் வைத்துக்கொண்டு நாங்கள் முடிவு எடுக்கமாட்டோம். சட்டமன்றத்தில் வைத்து அதற்கு உரிய நடவடிக்கையை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை அதுவும் ஒரு மாத காலத்திற்கு முன் என்னிடம் கொடுத்தார். அதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க இருக்கிறோம். சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x