Published : 24 Aug 2022 05:36 PM
Last Updated : 24 Aug 2022 05:36 PM

சென்னையில் செப்.10-ல் ஜாக்டோ-ஜியோ மாநாடு - ‘முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு’

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: சென்னையில் செப்டம்பர் 10-ல் ஜாக்டோ-ஜியோ நடத்தும் 'வாழ்வாதார நம்பிக்கை' மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் தெரிவித்தார்.

மதுரையில் இன்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம், மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலைப்பணியாளர் சங்க கட்டிடத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: ''கடந்த அதிமுக ஆட்சியில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல போராட்டங்கள் நடத்தியும் மனுவைக் கூட பெறவில்லை. அப்போது போராடியபோது, போராட்ட களத்திற்கே வந்து உங்களில் ஒருவராக இருந்து கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்றார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தற்போதைய திமுக அரசோடு, ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் தொடர்பாக மும்முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தமிழக முதல்வரிடம் மனுவும் வழங்கியுள்ளோம். அதனைத் தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ அமைப்பின் 'வாழ்வாதார நம்பிக்கை மாநாடு' சென்னையில் வரும் செப்.10-ம் தேதி நடத்தவுள்ளோம். அதில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். இதில் திமுக அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என நினைத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என ஆக.1-ல் தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியதற்கு நிச்சயமாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக பேசும் நிதியமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். கடந்த ஆட்சியில் பேச்சுவார்த்தை நடத்தாததால், தொடர் போராட்டம் நடத்தினோம். தற்போதைய முதல்வர், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்,'' என்றார். அப்போது, ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.நீதிராஜா, வெ. பாபு பிரேம்குமார், உயர்மட்டக்குழு உறுப்பினர் ரா.தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x