Last Updated : 24 Aug, 2022 04:09 PM

 

Published : 24 Aug 2022 04:09 PM
Last Updated : 24 Aug 2022 04:09 PM

பாஜக, ஆதரவு எம்எல்ஏக்களின் தொகுதிகள் புறக்கணிப்பு: புதுச்சேரி பேரவையில் குற்றச்சாட்டு

புதுச்சேரி: பாஜக எம்.எல்.ஏ.க்கள், பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினர். இதில் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் பேசும்போது, ''கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எதையுமே செய்யாத போது, இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களை எவ்வாறு செய்வீர்கள்? ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் பட்ஜெட் உரை உள்ளது. கோயில்களில் கமிட்டி போடப்படும் என சொன்னார்கள். கமிட்டி போடுங்கள், போடாமல் இருங்கள். திருபுவனை தொகுதியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினராக நான் உள்ளேன். என்னுடைய தொகுதியில் எனது ஆலோசனை இல்லாமல் 2, 3 கமிட்டிகள் போடப்பட்டுள்ளது.

இது எந்த விதத்தில் நியாயம். என்னை புறக்கணிப்பதற்கு காரணம் என்ன? பாஜகவை நான் ஆதரிப்பதற்காக என்னை கேட்காமல் போடுகிறார்களா? அல்லது தனித்தொகுதி என்பதால் யார் கேட்க போகிறார்கள் என்று நினைக்கிறார்களா? இதனை சட்டப்பேரவையில் தெளிவுபடுத்த வேண்டும். அப்போது குறுக்கிட்ட கொலப்பள்ளி அசோக் (சுயேட்சை): “இதே பிரச்சினை என்னுடைய தொகுதியிலும் உள்ளது” என்றார்.

கல்யாணசுந்தரம் (பாஜக): “ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரின் ஆலோசனையை கேட்டுதான் கோயில் கமிட்டி போட வேண்டும். ஆனால், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதியில் ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொன்னால் கூட அதனை கேட்காமல் செய்தால், அப்போது தொகுதி எம்எல்ஏவின் உரிமை பறிபோவதாகத்தான் அர்த்தம்.

பாஜகவில் எம்எல்ஏ என்பதாலும், பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதாலும் எங்களை பழிவாங்குகிறார்களா என்று பேரவையில் கூற வேண்டும். அரசுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, கையெழுத்து போட்டு ரங்கசாமியை முதல்வராக அமர வைத்துள்ளோம். ஆனால், பாஜக எம்எல்ஏக்களின் தொகுதிகளை முதல்வர் பழி வாங்குகிறாரா என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்கள். இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக கூட அமர்ந்து விடுகிறோம்.”

சிவசங்கர் (சுயேட்சை): “பாஜக மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் அவர்களது ஆலோசனை கேட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், எனது தொகுதியில் உள்ள 3 கோயிலுக்கு கமிட்டி அமைக்க கோரி கடிதம் அளித்து ஓராண்டாகியும் போடவில்லை.”

கல்யாணசுந்தரம் (பாஜக): “புதுச்சேரிக்கு பிரதமர் நிதி கொடுக்கவில்லை. நிதிக்குழுவில் சேர்க்கவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். ஆனால், இங்கு நடைபெறும் கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் கூட எங்களது தொகுதியில் புறக்கணிக்கப்படுகிறது. இப்பிரச்னை சட்டப்பேரவை தலைவர் தொகுதியில் கூட இருக்கிறது.”

அங்காளன் (சுயேட்சை): “ஒவ்வொரு கோயில் கமிட்டிலும் சரியான நபர்களை போட்டு நிர்வாகம் செய்ய வேண்டும்.” இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x