Published : 24 Aug 2022 03:57 AM
Last Updated : 24 Aug 2022 03:57 AM
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது, அனுமதி அளிப்பது தொடர்பான முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். தற்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காலை சிற்றுண்டித் திட்டம், ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்களிடம் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அந்த திட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் அண்ணா பல்கலை. வளாகத்தில் வரும் 30-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், உயர்கல்வித் தரத்தை மேம்படுத்துவது, மாநிலக் கல்வி கொள்கை, ஆராய்ச்சிகளை அதிகரிப்பது, `நான் முதல்வன்' திட்டத்துக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக உயர்கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT