Published : 20 Aug 2022 12:37 PM
Last Updated : 20 Aug 2022 12:37 PM

'பத்திரப்பதிவுத் துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன' - மநீம கண்டனம்

சென்னை: "புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத் துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது" என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: "புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத் துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது.

தனியார் நிறுவனத்திடமுள்ள 73 ஏக்கர் நிலத்தின் சிறுபகுதியை (117.5 செண்ட்) கூடுதல் விலைக்குப் பதிவு செய்வதன் மூலம், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். சமயத்தில் எஞ்சியுள்ள பெரும்பாலான நிலத்திற்குக் கூடுதல் இழப்பீடு பெறுவதற்காகவே இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

சர்வே எண்கள் குறிப்பிடாமல் பதிவுசெய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் குறிப்பிட்டு இந்த நிலத்தைப் பதிவுசெய்ய இயலாது என்று மாவட்டப் பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைவர், நிலத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவிட்ட இந்த உயரதிகாரி மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதும் அவர்மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் "சட்டத்தின் ஆட்சி" நடக்கிறது என்று முதல்வர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். ஆனால், பத்திரப்பதிவுத் துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பத்திரப்பதிவுத் துறையின் அமைச்சர், தலைவர் ஆகியோர் இதுபோன்ற முறைகேடுகள் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

லஞ்சஒழிப்புத்துறையானது நடைபெற்ற சட்டமீறலை விரைந்து விசாரித்து முறைகேட்டில் தொடர்புடையோர் அனைவர் மீதும் வழக்குப்பதிந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x