Published : 22 Oct 2016 03:07 PM
Last Updated : 22 Oct 2016 03:07 PM

திமுக அழைப்பு விடுத்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க காதர் மொய்தீன் விருப்பம்

வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எம். காதர் மொய்தீன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை அறிவாயலத்தில் திமுக பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினை காதர் மொய்தீன் சந்தித்துப் பேசினார்.

அதற்குப் பிறகு காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நீண்ட நாளாக கூட்டணி அமைத்து அரசியல் நடத்தி வருகிறது. அதே நிலை இப்போதும் தொடர்கிறது. நவ.19-ல் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மூன்று தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து ஸ்டாலினை சந்தித்தோம். மூன்று தொகுதிகளுக்கும் வெற்றி சிறப்பாக இருக்கிறது என்று எங்களிடம் ஸ்டாலின் கூறினார். திமுகவின் வெற்றிக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும்.

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை உள்ளது. நியாயமாக , நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்று நம்புகிறோம். பொதுமக்கள், வாக்காளர்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் தேர்தல் ஆணையம் கவனித்துக் கொண்டு நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும்.

காவிரி பிரச்சினைக்காக 25-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாயலத்தில் ஸ்டாலினால் கூட்டத்திற்கான அழைப்பு அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லம் லீகிற்கும் அழைப்பு கிடைத்திருக்கிறது. கட்சியின் சார்பில் நானும்,எம்.எல்.ஏ. என்கிற முறையில் அபூபக்கரும் கூட்டத்தில் கலந்து கொள்வோம்.

கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியும், ஜனாபதிபதி பிரதமர் ஆகியோர்களை சந்திக்கவும் முயற்சி எடுத்தது. தமிழகத்திலும் அதே நடைமுறை இருந்திருக்க வேண்டும். ஆளுங்கட்சி என்பதை விட தமிழக அரசே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் தான் வழக்கு இருக்கிறதே! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி என்ன பயன் என்றும் சொல்கிறார்கள். இதேநிலை தான் கர்நாடகாவிற்கும் உள்ளது. அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்கள். தமிழக அரசு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். வலுசேர்க்கும் நிலையும் வந்திருக்கும்.

தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. அதேநேரத்தில் எதிர்க்கட்சி ஏன் கூட்டவில்லை என்ற கேள்வி எழுந்தது. எனவேதான், திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. இதை வரவேற்கிறேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று சொன்ன அனைத்துக் கட்சிகளும் திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இந்த கூட்டத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமருக்கு நம்முடைய அழுத்தத்தை கொடுக்க முடியும்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குன்றி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதால் கூட்டம் கூட்ட அதுவும் ஒரு தயக்கமாக இருந்திருக்கலாம்.

தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற திமுக கூட்டியுள்ள கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்.

விவசாய சங்கத்தினர் அனைவரையும் அழைத்து கூட்டத்தை நடத்தி ஸ்டாலின் அதில் இயற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார். அப்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஓ. பன்னீர் செல்வம் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை அது பரிசீலனையில் இருக்கிறது என நம்புகிறேன். 25-ந்தேதிக்குள் என்ன முடிவு எடுப்பார் என்பதை பார்ப்போம்'' என்று காதர் மொய்தீன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x