Last Updated : 27 Oct, 2016 10:01 AM

 

Published : 27 Oct 2016 10:01 AM
Last Updated : 27 Oct 2016 10:01 AM

விரைவு ரயில்களில் சிறப்புப்பெட்டிகள் நீக்கம்?- மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி

ரயில்களில் மாற்றுத்திறனாளி களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்புப் பெட்டிகள் நீக்கப் படுவதைத் தடுத்து, அனைத்து ரயில்களிலும் அந்தப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் விரைவு ரயில்களில் பயணம் செய்ய சிறப்புப் பெட்டிகள் உள்ளன. அகல மான படுக்கை, சக்கர நாற்காலி களில் சென்று வருவதற்கு ஏதுவாக அதிக இடைவெளியில் நடைபாதை, குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்ட கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் அதில் உள்ளன. விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளி பயணிகள், முன்பதிவு செய்யாமலேயே இந்த பெட்டிகளில் பயணிக்கலாம். இதனால் இந்தத் திட்டம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், இந்த சிறப்புப் பெட்டிகள் அனைத்து ரயில் களிலும் இருப்பதில்லை எனவும், வசதிகள் இருந்தாலும்கூட அவற்றை முழுமையாகப் பயன் படுத்த முடிவதில்லை எனவும் சமீப காலமாக புகார்கள் கூறப் படுகின்றன. சிறப்புப் பெட்டிகளில் சாதாரண நபர்களும் பயணிப்பதால், இப்பிரச்சினை எழுந்தது. சிறிது சிறிதாக சிறப்பு ரயில் பெட்டிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது பல ரயில்களில் அந்தப் பெட்டி களே இல்லாத சூழல் ஏற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப் படுகிறது.

படிப்படியாக குறைப்பு

இதுகுறித்து தேசிய பார்வை யற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் பி.மனோகரன் கூறும்போது, ‘‘முந்தைய மத்திய அரசு, அனைத்து அதிவிரைவு, விரைவு ரயில் களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்புப் பெட்டிகளை அறிமுகப்படுத்தியது. இது மாற்றுத் திறனாளிகள் அனை வருக்கும் பயனளித்தது. பாதுகாப்பான பயணமாகவும் இருந்தது. ஆனால் நாளடைவில் அந்தப் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இப்போது பல ரயில்களில் அந்தப் பெட்டிகளையே நீக்கிவிட்டனர்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் அதிவிரைவு ரயிலில் நீக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதினோம். மாற்றுத் திறனாளிகள் பொதுவான பெட்டி களில் பயணிப்பது என்பது இயலாத காரியம் என்பதையும் அதில் தெரிவித்தோம். ரயில் களின் வசதிகளை மேம்படுத்து வதற்காகவே தற்காலிகமாக பெட்டிகள் நீக்கப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் பதில் தெரிவித்தது. ஆனால் அதன்பிறகு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களிலும் இந்த பெட்டிகளை நீக்கிவிட்டார்கள். நாளடைவில் இந்த வசதியே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகளை ரயில்களில் உடனே இணைத்து இயக்க வேண்டும்’’ என்றார்.

கூடுதலாகும் வசதிகள்

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நாடு முழுவதும் ரயில் பெட்டிகள் நவீனமயமாக்கப்படுகின்றன. அதில் சாதாரண பெட்டிகளுக்குப் பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலுமினியத்தை அதிகம் கொண்ட பிரத்யேக ரயில் பெட்டிகள், சுமார் 100 பயணிகள் வரை அமரும் வகையில் வடிவமைக் கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி களுக்கும் வசதிகள் கூடுதலாக் கப்படுகிறது. பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால் எப்போது அவை பயன்பாட்டுக்கு வரும் என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x