Published : 06 Aug 2022 01:13 PM
Last Updated : 06 Aug 2022 01:13 PM
சென்னை: “அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள 9 உரிமைகளைக் காக்கும் பொறுப்பில் இருந்து தவறமாட்டோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழா இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "மாநில மனித உரிமை ஆணையத்தின் 25-வது ஆண்டை முன்னிட்டு நடைபெறும் இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமானது 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையமானது 1997-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி. இதற்கான முறையான அறிவிப்பை தமிழக சட்டமன்றத்தில் 1997-ம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி, விதி எண் 110-ஐ பயன்படுத்தி முதல்வர் கருணாநிதி அன்றைக்கு வெளியிட்டார்.
மாநிலத்தில் மனித உரிமை ஆணையம் அமைக்க வேண்டும் என்று 1993-ம் ஆண்டு முதல் கருத்துரு இருந்தாலும், அது அமைக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய முதல்வர் கருணாநிதி, மத்திய அரசிடமிருந்து, இதுதொடர்பாக தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வந்தாலும், ஐந்து ஆண்டுகாலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
திமுகவின் ஆட்சி தமிழகத்தில் 1996-ம் ஆண்டு அமைந்த பிறகுதான், மாநில மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை 20.12.1996 அன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நயினார் சுந்தரத்தை தலைவராக நியமித்தது திமுக அரசு. இதனைச் சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி அன்றைக்கு அறிவித்தார். அதன்படி உருவாக்கப்பட்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழாவைத்தான் இன்று நாம் இங்கே கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
மனித உரிமை காக்கும் மாண்பாளரான கருணாநிதி இந்த இடத்தில் நினைவுகூர்வது பொருத்தமானதாக இருக்கும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதனின் மாண்புகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். தந்தை பெரியார் முதன்முதலில் தான் உருவாக்கிய அமைப்புக்கு 'சுயமரியாதை இயக்கம்' என்றுதான் பெயர் சூட்டினார்.
சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உயிரினும் மேலானது. மனித உரிமைக்கு அடித்தளமானதும் சுயமரியாதைதான். சுயமரியாதை - தன்மானம் - மனிதநேயம் - மனித உரிமைகள் ஆகிய அனைத்தும் ஒரே பொருளைத் தரக்கூடிய வேறுவேறு சொற்கள்தான். அதனால்தான் தனிமனிதனின் சுயமரியாதையாக இருந்தாலும் - ஓர் இனத்தின் தன்மானமாக இருந்தாலும் - மானுடக் கூட்டத்தின் உரிமைகளாக இருந்தாலும் அவை எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது; பறிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், கவனமாகவும் இருக்கிறோம். இவை எல்லாம் ஏதோ அரசியல் கட்சியின் கருத்துகள் மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டம் சொல்வதும் இதனைத்தான்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மிகமிக அடிப்படையான அம்சம் என்பதே மனித உரிமைகள்தான்.
ஆகிவைகள் பாதிக்கப்பட்டால் அதற்காகத் தீர்வு காணும் உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் பொறுப்பும் கடமையும் அனைத்து அரசுகளுக்கும் உள்ளது. அந்தக் கடமையிலிருந்து நாங்கள் ஒருநாளும் தவறமாட்டோம் என்ற உறுதியை நான் இங்கே தருகிறேன்.
எனது தலைமையிலான நமது அரசு, சட்டத்தின் அரசாக – நீதியின் அரசாக – சமூகநீதியின் அரசாக செயல்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். எனவேதான் நீதித்துறையினரின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுத்து வருகிறோம். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சேமநல நிதியானது 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நீதித்துறையின் உள்கட்டமைப்புத் தேவைகளுக்காக பல்வேறு நீதிமன்றங்கள் அமைக்கும் வகையில் சென்னையில் 4.24 ஏக்கர் நிலத்தை நீதித்துறைக்கு அரசு வழங்கி உள்ளது. 9 மாடி கட்டடம் கட்ட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடிய வகையில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இங்கு பேசிய உறுப்பினர் சொன்ன அந்தக் கோரிக்கையின்படி, ஆணையத்தின் விசாரணைக் குழுவில் காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சொன்னார். இது குறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். அதேபோல் மனித உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமைத் தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். மனித உரிமைக் கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.
எந்தவொரு தனிமனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுபடுத்தப் படக் கூடாது. இதற்குக் காரணமான யாரும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிடக்கூடாது. இவை மூன்றும் தான் இந்த அரசினுடைய மனித உரிமைக் கொள்கை என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளை முன்வைக்கவும் நான் விரும்புகிறேன். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளாக இவை அமைந்துள்ளன.
இக்கோரிக்கைகளை சில மாதங்கள் முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் முன்வைத்தவைதான். இருப்பினும் மீண்டும் அவற்றை இங்கு வலியுறுத்த, நினைவூட்ட நான் விரும்புகிறேன். இங்கு வந்து கௌரவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவற்றை தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றித்தரவும் உங்கள் அனைவரின் சார்பில் நான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீதித்துறையைப் பொறுத்தவரை நான் இங்கே கோரிக்கை வைப்பவனாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை நீதிபதிகள் அறிவார்கள் என்று நான் நம்புகிறேன். சட்டத்தின் அரசாக - நீதியின் அரசாக - அதுவும் சமூகநீதியின் அரசாக அமைவதுதான் மக்களின் அரசாக அமைய முடியும். 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாங்கள் நடத்தி வருகிறோம்.
மக்களுக்கு இன்றைய தேவை என்ன என்பது மட்டுமல்ல, முக்கியமாக நீதி மட்டும்தான் என்பதை நாங்கள் அறிவோம். உலகப் பொருளாதார மேதையான அமர்த்தியா சென் கூறுகிறார். அவர் The idea of justice என்ற புத்தகத்தில், "நீதியை உருவாக்கிக் கொடுப்பதும் - அநீதி எற்படாமல் தடுப்பதும் - ஆகிய இரண்டும் முக்கியமானது" என்கிறார். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் செயலாற்றி வருகிறோம்.
இதைத்தான் அய்யன் வள்ளுவர் தனது குறளில் “வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூம் கோடா தெனின்” – என்று கூறினார், இதன் பொருள், ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நெறி தவறாத ஆட்சி முறையே என்பதாகும். குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன்வைத்து செல்கிறோம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து விழைகிறோம். அந்த வகையில், மாநில மனித உரிமை ஆணையமானது இத்தகைய சமூகநீதி சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT