Published : 31 Jul 2022 06:41 AM
Last Updated : 31 Jul 2022 06:41 AM
சென்னை: மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி, வெற்றிகரமான தலைவராகத் திகழ்கிறார் பிரதமர் மோடி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
`மோடி@20 தென்னிந்தியா' என்ற அமைப்பு சார்பில், `மோடி@20: டிரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தக அறிமுக விழா சென்னை போரூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மக்கள் தேர்வு செய்த முதல்வராகவும், பிரதமராகவும் 20 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் மோடி. மக்களுக்கு பதில் கொடுக்கும் பொறுப்பு இருப்பதால்தான், அவர் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார். அவர் செய்தது என்ன, செய்ய வேண்டியது என்ன என்பதை மக்கள் ஆராய்ந்து பார்த்து, மீண்டும் மீண்டும் அவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இவ்வாறு மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றுவருவது சாதாரண விஷயம் அல்ல. மக்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறார் தலைவர் மோடி. அவர் பதவியை அனுபவிப்பதற்காக ஆட்சிக்கு வரவில்லை. அடிப்படையை மாற்றுவதுதான் எங்களது நோக்கம் என்று அவர் அடிக்கடி கூறுவார். கரோனாவின் ஆரம்ப காலத்தில் தடுப்பூசி இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்தது. அப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி கலந்து பேசினார். ஏழைகளுக்கு உணவு கொடுத்தார். பிறகு தடுப்பூசிகளை வழங்கினார்.
இப்போது, முன்னேறிய நாடுகளுக்கும் தடுப்பூசி கொடுக்கும் அளவுக்கு இந்தியா உயர்ந்து உள்ளது. மொத்தம் 200 கோடி தடுப்பூசியைக் கொடுத்துள்ளோம்.
பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. நாட்டின் ஒரு பகுதி மட்டும் முன்னேற வேண்டும் என்று மோடி கருதுவதில்லை. அனைத்து மாநிலங்களும் முன்னேற்ற வேண்டும் என்று உழைத்துவருகிறார். மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்றவடைய வேண்டுமென்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசும்போது, "இந்தப் புத்தகத்தை அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டும். இது 21 வல்லுநர்கள் எழுதிய புத்தகமாகும். ஒரு மனிதன் சிறிய விஷயத்தைக்கூட எப்படி செய்கிறோனா, அதனடிப்படையில்தான் அவரது வாழ்க்கை அமைகிறது" என்றார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசும்போது, ‘‘தூய்மை இந்தியா திட்டம், உஜ்வாலா திட்டம் ஆகியவை பெண்களுக்கானத் திட்டங்கள். இவை மகளிரின் ஆரோக்கியம், அவர்களது கவுரவத்தை உயர்த்தும்’’ என்றார்.
`தி இந்து' குழுமத் தலைவர் மாலினி பார்த்தசாரதி பேசும்போது, ‘‘மக்கள் மத்தியில் பிரபலமானவராகத் திகழ்வது, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது, மக்களுக்கு உதவும் ஆட்சிமுறை ஆகியவையே மோடியின் வெற்றிக்கு முக்கியக் காரணிகள்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், அனைத்து தரப்பு மக்களுக்கும் தொழில்நுட்பம் எளிதாகச்சென்று சேர்ந்துள்ளது. அனைத்துசேவைகளும் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. மாநிலக் கலாசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் மோடி. அனைத்து மாநில முதல்வர்களுடன் நல் உறவை வளர்த்து வருகிறார். முன்பிருந்த மோதல் போக்கு குறைந்துவிட்டது’’ என்றார். இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT