Published : 29 Jul 2022 04:21 AM
Last Updated : 29 Jul 2022 04:21 AM
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 5.10 மணி அளவில் சென்னை வந்தார். சதுரங்க கட்ட கரை போட்ட வேட்டி, சட்டையை பிரதமர் அணிந்திருந்தார். விமான நிலையத்தில் பிரதமரை தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 5.50 மணிக்கு அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு பிரதமர் வந்தார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.
அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக விழா நடந்த நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு பிரதமர் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் ஓரத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், வாழ்த்து கோஷங்களை எழுப்பி பிரதமரை வரவேற்றனர். மக்கள் திரண்டிருந்த பகுதிகளில் பிரதமரின் கார் மெதுவாக சென்றது. காரில் இருந்தபடியே, மக்களைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர்.
சிவானந்தா சாலையின் ஒரு பகுதி முழுவதும் பிரதமரை வரவேற்று பாஜக சார்பில் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு சார்பில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவானந்தா சாலையில் திரண்டிருந்த பாஜகவினர், பிரதமரின் கார் மீது மலர்களை தூவியும் வேதங்கள் முழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வையொட்டி தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் மத்திய கைலாஷ், நந்தனம், தேனாம்பேட்டை மெட்ரோ, அண்ணா அறிவாலயம் எதிரில், சர்ச் பார்க் அருகில், ஆயிரம் விளக்கு புரோ எப் எஸ் கட்டிடம், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில், அரசு கவின் கலைக் கல்லூரி எதிரில் என 8 இடங்களில் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அண்ணாமலை பாராட்டு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பதிவில், ‘கடந்த 1967-ம் ஆண்டுக்கு முன்பு தமிழர்களின் கலாச்சார சிறப்பும், பெருமையும், ஆன்மிக வழித்தடத்தையும் இனியும் மறைத்திட இயலாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு நிகழ்ச்சி. இச்சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கிய முதல்வருக்கு பாராட்டுகளும், நன்றியும்’ என குறிப்பிட்டுள்ளார்.
கலை நிகழ்ச்சிகளை ரசித்த வீரர்கள்
> நேரு உள்விளையாட்டு அரங்குக்கு அழைத்து வரப்பட்ட செஸ் வீரர்களுக்கு தப்பாட்டம், பரதம், காவடி, பரதநாட்டியம் ஆகிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
> மாலை 4.35 மணி அளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. எல்சிடி திரையில் மணலை தூவி, மகாத்மா காந்தி, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஒலிம்பியாட் சின்னமான தம்பி உள்ளிட்ட படங்களை வரைந்தார் மணல் ஓவியக் கலைஞர் சர்வம் படேல்.
> திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தூர்கா ஸ்டாலின் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தனர். கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
> தமிழரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து 4.52 மணி அளவில் விழா மேடைக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
> அரங்கின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 3-டி திரையில் முதலில் செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
> ‘நாமெல்லாம் ஒன்று’ என்னும் கருத்தை முன்வைத்து நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், மோகினியாட்டம், மணிப்பூரி, சத்திரியா, ஒடிசி, கதகளி உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட்டன.
> ஒரே நேரத்தில் இரு பியானோக்களை இசைத்து அசத்தினார் இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம்.
> தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் நிகழ்த்துக் கலை நடந்தது.
> பிரபலமான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பாடகி தீ மற்றும் மாரியம்மாளால் பாடப்பட்டு, நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
> கலை நிகழ்ச்சிகளை வெளிநாட்டு வீரர்கள் கைதட்டி ரசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT