Last Updated : 25 Jul, 2022 06:14 PM

 

Published : 25 Jul 2022 06:14 PM
Last Updated : 25 Jul 2022 06:14 PM

புதுச்சேரி முழுவதும் 1 லட்சம் தேசியக் கொடி ஏற்ற பாஜக ஏற்பாடு: சாமிநாதன் தகவல்

சாமிநாதன், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் | கோப்புப் படம்

புதுச்சேரி: 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முழுவதும் 1 லட்சம் தேசியக் கொடி ஏற்ற பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: "75-வது சுதந்திரத்தினத்தையொட்டி 1 லட்ச வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்ற பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் முழுக்க இளையோரின் தேசப் பற்றை வளர்க்கும் நோக்கில் புதுச்சேரியில் உள்ள மறைந்த தலைவர்களின் சிலைகளை சுத்தம் செய்தல், வீடுகளில் தேசியக் கொடியேற்ற உதவுதல் ஆகிய பணிகளில் பாஜக ஈடுபடும்.

தேசப்பற்றை வளர்க்கும் விதமாக மாணவர்களிடம் தேசியக் கொடி வழங்கப்படும், மக்கள் கூடுகின்ற இடங்களில் தேசியக்கொடி ஏற்ற கூடிய நிகழ்ச்சியும் நடத்தப்படும், தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,

கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாட்டில் கடன் வாங்காத ஒரே பிரதமர் மோடி. புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து குறித்து நிதி ஆதாரத்தை பெருக்கிய பின்னர் மத்திய அரசு முடிவு செய்யும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பற்றி பேச காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கத்துக்கு தகுதியில்லை. காங்கிரஸார் தங்கள் உள்கட்சி பிரச்சினையை முதலில் தீர்த்து கொண்டு தேசிய பிரச்சினை குறித்து பேசலாம்.

அரசியல் கட்சி என்றால் பல்வேறு தரப்பினர் இருப்பார்கள். குறிப்பாக புதுச்சேரி காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அவர்களை கட்சியில் நீக்குவார்களா? உயர் பதவியில் யார் தவறு செய்தாலும் அவர்களை உடனடியாக பா.ஜ.க கட்சியிலிருந்து நீக்கும். யூகங்களின் அடிப்படையில் போலீஸாரை மிரட்டுவதாக கூறுவது ஏற்புடையதல்ல. தவறு செய்பவர்கள் எல்லாம் பாஜக என்று கூறிவிட முடியாது. கட்சியால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தவறு செய்தால், அவர்கள் மீது கட்சி சார்பில் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சாமிநாதன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x