Published : 25 Jul 2022 07:20 AM
Last Updated : 25 Jul 2022 07:20 AM
திருவள்ளூர்: செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 95 ஆயிரம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 23 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
அரசுப் பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,301 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நேற்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல்12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதிஎன்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 115 மையங்களில் 179 கூடங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த தேர்வுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 56,738 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 45,001 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். 11,737 பேர் தேர்வை எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு நகரில் 2 பள்ளி களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலதாமதமாக வந்த 25-க்கும் மேற்பட்டோரை தேர்வெழுத கண்காணிப்பாளர் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பேசி அவர்களை திருப்பி அனுப்பினர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய 9 வட்டங்களில் 195 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை நடைபெற்று வரும் நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தேர்வர்கள் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வை எழுத 60,305 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 49,518 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 10,787 பேர்தேர்வு எழுதவில்லை என ஆட்சியர்அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராஜாஜிபுரம் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT