Published : 16 Jul 2022 09:58 AM
Last Updated : 16 Jul 2022 09:58 AM

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம்: பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி

சி. எஸ். ஆறுமுகம்

கும்பகோணம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு காலை குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
இந்த தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினர்.

தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை வெளிப்படுத்தும் வகையில் இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாதை சம்பவம் நடந்த பள்ளி முன் ஆண்டுதோறும் வைக்கப்படுவதுபோல் நிகழாண்டும் பெற்றோர் தரப்பில் வைக்கப்பட்டு மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.மாலையில் மகாமககுளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் கும்பகோணம் நகர மேயர் க.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் திமுகவினர் பாலக்கரையில் உள்ள நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, ஊர்வலமாக சென்று தீ விபத்து நிகழ்ந்த பள்ளிக்கு வந்து மரியாதை செலுத்தினர்.

ஜூலை 16-ஆம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x