Published : 15 Jul 2022 05:41 AM
Last Updated : 15 Jul 2022 05:41 AM
கடலூர்: சன்மார்க்க சொற்பொழிவாளர், வள்ளலார் பெருந்தொண்டர் ஊரன் அடிகளார் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார்.
வள்ளலார் வழியில் நின்று சன்மார்க்க அறநெறியைப் போதித்து வந்த, ஊரன் அடிகளார் (91) கடந்த சில ஆண்டுகளாக தனது அறப்பணியை குறைத்துக் கொண்டு வடலூரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டார். எனினும், இரவு 11:30 மணிக்கு அவர் காலமானார். நேற்று மாலை வடலூரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறப்பணியில் ஆர்வம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தில் கடந்த 22.05.1933-ல் ராமசாமி - நாகரத்தினம் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர் ஊரன் அடிகளார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் குப்புசாமி. கண்ணூரில் தொடக்க கல்வி, ஸ்ரீரங்கத்தில் உயர்நிலைக் கல்வி, திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்தார். நகராட்சி நகர் அமைப்பு ஆய்வாளராக திருச்சி, ஸ்ரீரங்கம், வேலூர் நகராட்சிகளில் 12 ஆண்டு கள் பணிபுரிந்தார்.
வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு துறவறம் மேற்கொண்டார். தனது 35-வது வயதில் 1969-ம் ஆண்டு வடலூருக்கு வந்தார். ‘சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்’ என்ற ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி தமிழ் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறிப்பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தார்.
1970-ம் ஆண்டு முதல் வடலூரிலேயே நிரந்தரமாக தங்கிவிட்ட இவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனி என பல்வேறு நாடுகளுக்குச் சென்று வள்ளலாரின் கருத்துகளை பரப் பும் பணியை மேற்கொண்டு வந்தார்.
பன்முகத் தன்மை கொண்டவர்
1970-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை வடலூரில் சன்மார்க்க நிலையங்களின் அறங்காவலர், அறங்காவலர் குழு தலைவர், தர்மசாலை திருப்பணி குழு தலைவர், தக்கார் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சன்மார்க்க சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், நாடக நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர், ‘வடலூர் வரலாறு’, ‘ராமலிங்கரும் தமிழும்’, ‘ராமலிங்க அடிகளாரின் சிதம்பர அனுபவங்கள்’, ‘ராமலிங்க அடிகளாரின் வரலாறு’, ‘வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வரலாறு’, ‘சைவ ஆதீனங்கள்’, ‘வீர சைவ ஆதீனங்கள்’ உட்பட 16 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘ராமலிங்க அடிகளார் வரலாறு’ நூல் தமிழக அரசின் பரிசு பெற்றுள்ளது.
2020-ம் ஆண்டில் தமிழக அரசின் வள்ளலார் விருது ஊரன் அடிகளாருக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் நேற்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
“குரு பூர்ணிமா அன்று இரவு (நேற்று முன்தினம் இரவு), ஊரன் அடிகளார் இயற்கை எய்தியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க அன்பர்களுக்கு, வள்ளலாரின் அறநெறியை பரப்புவதில் தவத்திரு ஊரன் அடிகள் குருவாக இருந்து வந்தார். அவர் இந்த நாளில் சித்தியடைந்திருப்பது முக்கியத்துவமாகிறது” என்று வள்ளலார் வழி சன்மார்க்க அன்பர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT