Published : 12 Jul 2022 04:54 AM
Last Updated : 12 Jul 2022 04:54 AM

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் முடிவுறும் - போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் துறை அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். படம்: எம்.முத்துகணேஷ்

குரோம்பேட்டை: போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 4-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் மு.சண்முகம் எம்.பி.,கி.நடராசன் (தொமுச), அ.சவுந்தரராசன், கே‌.ஆறுமுக நயினார் (சிஐடியு) உட்பட 66 தொழிற்சங்கங்களின் தலைவர்களும், போக்குவரத்து முதன்மைச் செயலாளர் முனைவர் கே.கோபால், நிதித்துறை இணைச்செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் மற்றும் 8 போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து 4 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் ஊதிய விகித வித்தியாசங்களை எல்லாம் கணக்கீடு செய்து அதை சரி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதை முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்று, அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும். விரைவில் தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைகளை முடிக்க ஆவலாக உள்ளோம். அடுத்த பேச்சுவார்த்தை விரைவில் வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சூரியமூர்த்தி கூறும்போது, “4 மணிநேரம் அமைச்சரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் மன நிறைவு அளிக்கும் வகையில் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட எந்த ஒரு அறிவிப்பும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இல்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்துள்ளனர். அடுத்த பேச்சுவார்த்தையில் அரசின் முடிவு வரும் என நம்பி இன்றைய பேச்சுவார்த்தை முடிவு பெற்றுள்ளது. அரசு போக்குவரத்து துறை எந்த சூழ்நிலையிலும் தனியார் மயம் ஆக்கப்படாது என அமைச்சர் கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி பேசும்போது, “கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை என்றால் கூட்டுக் குழு சார்பில் முதல்வரை சந்திக்க உள்ளோம்” என்றார்.

பேச்சுவார்த்தை குறித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘‘நமது தரப்பின் நியாயங்களை வலுவாக முன்வைத்து, நமது நியாயங்களை முதல்வரிடம் எடுத்துச்சென்று, நிதிநிலையைக் கணக்கில் கொள்ளாமல் நியாயமான ஒப்பந்தத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x