Published : 11 Jul 2022 04:55 PM
Last Updated : 11 Jul 2022 04:55 PM

“அதிமுகவிற்கே இந்த நிலை என்றால், மக்களுக்கு...” - ராயப்பேட்டை சம்பவம் குறித்து இபிஎஸ் ஆவேசம்

சென்னை: “அதிமுகவில் உயர்ந்த பதவிகளை வழங்கிய தொண்டர்களைத் தாக்கி, அவர்களுக்கு நல்ல வெகுமதியை ஓபிஎஸ் வழங்கியுள்ளார்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தொண்டர்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது முதல் எங்களுக்கு பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தன. அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழையலாம் என்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சமூக விரோதிகள் அத்துமீறி தலைமைக் கழகத்தில் நுழையலாம் என்று தகவல் கிடைத்த காரணத்தால், அலுவலகத்திற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இன்று நடந்த சம்பவம் மூலம் எங்களுக்கு வந்த தகவல் உண்மை என்று தெரிந்துவிட்டது. புகார் கொடுத்தும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் ரவுடிகளை அழைத்து வந்து கட்சிக்காரர்களை தாக்கிய சம்பவம் வேதனை அளக்கிறது. முதல்வர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகளை அளித்த தொண்டர்களுக்கு நல்ல வெகுமதி அளித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

மனசாட்சி இல்லாத மிருகத்தனமான ஒருவருக்குதான் இதுபோன்ற எண்ணம் வரும். மீன்பாடி வண்டியில் கற்களை ஏற்றி வந்து ரவுடிகள், தொண்டர்களைத் தாக்கினார்கள். கல் ஏறிந்தவர்களை காவல் துறையினர் தடுத்த நிறுத்தவில்லை.

காவல் துறையும் ரவுடிகளுடன் சேர்ந்து தொண்டர்களை தாக்கியது கொடுமையானது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. அதிமுகவிற்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு என்ன நிலை என்பதை யோசித்து பார்க்க வேண்டும். கொடுமையான நிகழ்வு தமிழ் மண்ணில் அரங்கேறி உள்ளது. இதற்கு முழுக் காரணம் முதல்வரும், ஓ.பன்னீர்செல்வமும்தான்.

அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அள்ளிச் சென்றுள்ளனர். காவல் துறை பாதுகாப்புடன் ரவுடிகள் புகுந்து ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனர். இது எவ்வளவு கேவலமானது. சரியான நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம். அதிமுக அலுவலகத்தை நீதிமன்றம் மூலம் மீட்டு எடுப்போம். அதிமுக அலுவலகம் தொண்டர்களின் சொத்து" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x