Published : 11 Jul 2022 02:10 PM
Last Updated : 11 Jul 2022 02:10 PM

தலைமையில் இபிஎஸ்... ஓபிஎஸ் நீக்கம்... அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ - ஜூலை 11 ‘சம்பவங்கள்’

சென்னை: ஜூலை 11, 2022... உண்மையிலேயே இந்த நாள் அதிமுக அரசியல் வரலாற்றில் குறித்து வைக்கப்பட வேண்டிய நாள்தான். ஒற்றைத் தலைமை என்ற இலக்கை அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் இருக்கின்றனர். நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி தலைமைக் கழகத்தில் முகாமிட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இது வெகு நிச்சயமான சறுக்கல்தான். ஆனால், சறுக்கல் அவருக்கு மட்டும்தானா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

தீர்ப்புக்கு முன்: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று காலை சரியாக 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்துக்குள்ளேயே உச்சபட்ச அரசியல் நாடகங்கள் எல்லாம் அரங்கேறிவிட்டன. அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்திற்கு இபிஎஸ் புறப்பட்டுச் செல்ல, ஓ.பன்னீர்செல்வமோ வழக்கம்போல் காரில் செல்லாமல் தனது பிரச்சார வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்திற்குப் புறப்பட்டார்.

இந்தத் தகவல் வெளியானதுமே அதிமுக அலுவலகத்தின் முன் திரண்டிருந்த ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு மூண்டது. இது வழக்கமானதுதான் என்று சொல்லப்பட்ட நிலையில், ஓபிஎஸ் வாகனம் ராயப்பேட்டையை நெருங்க நெருங்க மோதல் தீவிரமானது. அதிமுக பொதுக்குழு நடைபெறும் நாளில் கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற ஓபிஎஸ் தரப்பில் முயற்சிகள் நடைபெறலாம் என்று இபிஎஸ் தரப்பில் காவல் ஆணையரகத்தில் பாதுகாப்பு கோரி மனுவும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அந்தக் கோரிக்கைக்கு ஏற்ற அளவில் அங்கே பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை என்பது களத்தில் இருந்து வந்த தகவல்.

இதற்கிடையில், ஓபிஎஸ் வாகனம் அவ்வை சண்முகம் சாலையை வந்தடைந்தது. அப்போது இருதரப்பினரும் சரமாரியாக கற்களை வீசிக் கொண்டனர். வன்முறைக் களமாக காட்சியளித்தது ராயப்பேட்டை அதிமுக அலுவலகப் பகுதி. திடீரென போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பைலட் வாகனம் ஒன்று சீறிப்பாய, அதன் பின்னால் ஓபிஎஸ் வாகனமும் அதிமுக கட்சி அலுவலகத்திற்குள் சென்றது. அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைகள் ஓங்கின.

அவர்கள் கட்சி அலுவலகக் கதவுகளை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. ஒருவழியாக கட்சி அலுவலகத்திற்குள் சென்ற ஓபிஎஸ் சலனமின்றி பால்கனியில் இருந்து கையசைத்துவிட்டு உள்ளே ஆலோசனைக்குச் சென்றார். இந்த வேளையில் தீர்ப்பும் வந்துவிட்டது. அதிமுக பொதுக்குழுவை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சம்: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கட்சி பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார். பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்தார். | வாசிக்க > 'நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்' - உயர் நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் |

தீர்ப்புக்குப் பின்: உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையாத நிலையில், அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையத் தொடங்கியது. அப்படியே வானகரத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் அங்கே நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே பொதுக்குழு மேடையேறினார் இபிஎஸ். முதலில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. வெறும் 10 நிமிடங்களே நடந்த அந்தக் கூட்டத்தில் பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது.

பொதுக்குழு முக்கிய தீர்மானங்கள்: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில் சில மிக முக்கியமான தீர்மானங்கள் இருக்கின்றன. தீர்மானம் 3-ல், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் 4, அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுதல்.

தீர்மானம் 6 கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பு, தேர்தல் அதிகாரிகளை நியமித்தல். தீர்மானம் 7, ஒற்றைத் தலைமை தேவை ஆகியன கட்சி சார்ந்த முக்கிய தீர்மானங்கள். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 4 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

16 தீர்மானங்கள் என்னென்ன?

ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல், திமுகவுக்கு கண்டனங்கள் உள்ளிட்ட 16 தீர்மானங்கள், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் முழு விவரம்: 16 தீர்மானங்கள் என்னென்ன?

சலசலப்பும் ஓபிஎஸ் நீக்கமும்: எல்லாம் சுமுகமாக போய்க் கொண்டிருந்தபோதே பொதுக்குழு கூட்டத்தில் திடீரென சலசலப்புகள் எழுந்தன. ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. மேடையிலேயே சில வாக்குவாதங்களும் இது தொடர்பாக நடந்தன. அப்போது குறுக்கிட்ட கே.பி.முனுசாமி, "உங்களுடைய உணர்வுகளை தீர்மானமாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார். அதுவரை அமைதி காக்கவும்" என்று சமாதானப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார். இந்த சிறப்புத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

ஓபிஎஸ்ஸின் அதிரடி பேட்டி: அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக சட்ட விதிகளின்படி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தனர். என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லை. அதிமுக விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறேன். அதிமுக விதிகளின்படி தொண்டர்களுடன் இணைந்து நீதிமன்றத்திற்கு சென்று நீதியை பெறுவோம்" என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இபிஎஸ் சரமாரி தாக்கு:

இதனிடையே, “திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக குற்றம்சாட்டினார். | விரிவாக வாசிக்க > “திமுகவின் கைக்கூலியாக ஓபிஎஸ் செயல்படுகிறார்” - அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் சரமாரி தாக்கு

அந்த 'இரும்புக் கோட்டைக்கு' சீல்: அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த் துறை சீல் வைத்தது. கட்சியினர் இடையிலான மோதலைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகம் உள்ள பகுதியில் 145 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாசிக்க > அதிமுக அலுவலகத்திற்கு சீல்: என்ன சொல்கிறது சிஆர்பிசி 145?

இபிஎஸ் ஆவேசம்:

“அதிமுகவில் உயர்ந்த பதவிகளை வழங்கிய தொண்டர்களைத் தாக்கி, அவர்களுக்கு நல்ல வெகுமதியை ஓபிஎஸ் வழங்கியுள்ளார்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும், திமுக அரசையும் அவர் கடுமையாக சாடினார். வாசிக்க > “அதிமுகவிற்கே இந்த நிலை என்றால், மக்களுக்கு...” - ராயப்பேட்டை சம்பவம் குறித்து இபிஎஸ் ஆவேசம்

திமுக திட்டவட்ட மறுப்பு:

“அதிமுக சண்டைக்கும், திமுகவுக்கும் தொடர்பில்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். | வாசிக்க > அதிமுக சண்டைக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

ஓபிஎஸ்ஸுக்கு சறுக்கலா? அதிமுகவுக்கே பின்னடைவா? எம்ஜிஆர் காலத்தில்தான் அதிமுக மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவானது. அவரது மறைவுக்குப் பின்னர் ஜானகி தரப்பு ஜெயலலிதா தரப்பு என்ற மோதல்கள் எழுந்தாலும் கூட ஜெயலலிதா கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அவர் சர்வாதிகாரப் போக்கையே கட்சியில் கடைபிடித்தார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும் கூட கட்சியின் தனித்த ஆளுமையாக இருந்தார்.

அவருக்குப் பின்னர் கட்சியை பலமாக வைத்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் முதல்வர்களாக இருந்த ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு இருந்தது. தொண்டர்கள் பிரிந்து சென்றுவிடாமல் அரவணைத்துச் செல்ல கட்சியின் பலத்தை வளர்ச்சியை எதிர்காலத்தை மட்டுமே கவனத்தில் கொண்ட இரட்டைத் தலைமை இருந்திருக்க வேண்டும் என்பதே நடுநிலை அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில், ஒற்றைத் தலைமை சலசலப்புகளை முழுமையாகத் தீர்த்துவிடாது என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. ஆகையால்தான் ஒற்றைத் தலைமை ஓபிஎஸ்ஸுக்கு சறுக்கலா, அதிமுகவுக்கே பின்னடைவா என்ற விவாதங்கள் சமூக வலைதளங்கள் தொடங்கி கருத்தரங்கங்கள் வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தன்னை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்தப் போகிறது என்பதற்கு எவ்வளவு தூரம் உட்கட்சி பூசல் இல்லாமல் இருக்கிறது என்பதே முதல் தகுதியாக இருக்கக் கூடும்.

தொகுப்பு: பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x