Published : 09 Jul 2022 07:17 AM
Last Updated : 09 Jul 2022 07:17 AM
சென்னை: தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று, அனைத்து மாவட்டஆட்சியர்களுக்கு, மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹு அறிவுறுத்தியுள்ளார்.
வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் இணைப்பு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார்எண்களை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாநிலதலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதசாஹு அறிவுறுத்திஉள்ளார்.
காணொலி மூலம் ஆலோசனை
மேலும், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, கடந்த 6-ம் தேதிஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக அவர் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க அங்கீகரிக்கப்பட்டவராவார். கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரின் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியைத் தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனால், அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களை வீடு வீடாக அனுப்பி, வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்களை படிவம் 6-பி வழியாகப் பெற வேண்டும்.
கருடா மென்பொருள்
இப்படிவம் கையில் கிடைத்த7 நாட்களுக்குள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக, கருடா மென்பொருள் வழியாகவோ, வாக்காளர் பதிவு அலுவலர்கள் இஆர்ஓநெட் (ERONET) மூலமாகவோ பதிந்து, டிஜிட்டல்மயமாக்க வேண்டும். குறு அளவில் சிறப்பு முகாம்களை அமைத்தும் ஆதார் எண்களைப் பெறலாம். ஆதார் எண்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மாவட்டம் மற்றும் தொகுதி அளவில், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.
வற்புறுத்தக் கூடாது
இப்பணிகளின்போது வாக்காளரை வற்புறுத்தி ஆதார் எண்களைப் பெறக்கூடாது. அவர்களின் முழு சம்மதத்துடனே பெற வேண்டும். ஒருவேளை வாக்காளர்களிடம் ஆதார் எண்இல்லை என்றால், அவர்களிடம் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்குமாறு கோரலாம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT