Published : 08 Jul 2022 05:57 AM
Last Updated : 08 Jul 2022 05:57 AM
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறதா, காலாவதி ஆகிவிட்டதா என்றும், பொதுக்குழுவை கூட்டுவதற்கான நடைமுறைகள் குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக இபிஎஸ் தரப்பு இன்று பிற்பகலுக்குள் விரிவாக பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 11-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்திருந்தார். ‘கட்சி விதிகளின்படி, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்து முறைப்படி நோட்டீஸ் அனுப்பவில்லை’ என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 4.45 வரை நீடித்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல், நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த வாதம்:
ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், பி.எச்.அரவிந்த்பாண்டியன் மற்றும் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம்: தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற பெயரில், யாருடைய கையெழுத்தும் இல்லாமல் கட்சியில் இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் ஜூலை 11-ல் பொதுக்குழு நடப்பதாக அழைப்பு விடுத்துள்ளனர். ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு பதவி வகிக்கும் நிலையில், கட்சிவிதிகளின்படி இருவரின் ஒப்புதல் இல்லாமல் அந்த பதவிகளை நீக்க முடியாது. இருவரும் சேர்ந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும். இந்த 2 பதவிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை உள்ளது.
பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால்: பொதுக்குழுவை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதால் அந்த பதவிகள் காலாவதி ஆகிவிட்டன. அதன் நீட்சியாகவே, வரும் 11-ம் தேதி சிறப்பு பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். அதில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இந்த வழக்கில் பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும். பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கூடாது.
இவ்வாறு வாதம் நடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறதா, காலாவதி ஆகிவிட்டதா? பொதுக்குழு கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும்? அந்த நோட்டீஸில் யார் கையெழுத்திட வேண்டும்? கட்சி விதியின்படி பொதுக்குழுவை கூட்டும் நடைமுறை என்ன?’’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர் மனுதாரர்களான அதிமுக நிர்வாகிகள், பழனிசாமி, தமிழ்மகன் உசேன் ஆகியோர் இன்று பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்க கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுக உள்கட்சி மோதலால், சட்டம் - ஒழுங்கு சீர்கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சினை முடிவுக்கு வரும் வரை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரர் அதிமுக உறுப்பினரா, அல்லது கூட்டம் நடைபெறும் பகுதியில் வசிக்கிறாரா?’’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், பொதுநல வழக்கு என்ற பெயரில் வெற்று விளம்பரத்துக்காகவும், தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்த ஒரு வாரத்துக்குள் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT