Published : 06 Jul 2022 09:00 AM
Last Updated : 06 Jul 2022 09:00 AM
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தின்போது தீக்காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குப்பைக் கிடங்கின் எதிரே இருந்த 6 கூரை வீடுகளும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதில், ஒரு வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரான ஆரோக்கியசாமி(73) என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார்.
இதனிடையே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினார். அப்போது, எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ‘‘தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தர சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT