Published : 02 Jul 2022 07:25 AM
Last Updated : 02 Jul 2022 07:25 AM
சென்னை: கூட்டாட்சி செயல்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஜிஎஸ்டி என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 5-வது ஜிஎஸ்டி தினக் கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலர்கள், ஜிஎஸ்டி செலுத்திய பொதுமக்கள், அரசு அதிகாரிகள், மாணவர்களுக்கு ஆளுநர் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: 2017 ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு, பல்வேறாகப் பிரிந்து இருந்த வரிகளை ஒருங்கிணைத்து, `ஒரு நாடு ஒரே வரி' என்னும் முறை அமல்படுத்தப்பட்ட இந்நாள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
நாட்டின் கூட்டாட்சி செயல்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஜிஎஸ்டி தான். கூட்டாட்சி மூலம் ஒருங்கிணைந்த, வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும்என்று அம்பேத்கர் தெரிவித்துள்ளார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வைகொண்ட அணுகுமுறைமூலம், நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதுடன், `ஒரே பாரதம், உன்னத பாரதமும்' உருவாக்கப்படுகிறது.
கரோனா தொற்றுக்குப் பின் தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் ரூ.1,04,970 கோடி வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பெரும்பாலான முடிவுகள், ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு கூட்டாட்சி அமைப்பாகும்.
நாட்டின் வளர்ச்சிக்கு வரிசெலுத்துவோரின் பங்கு அத்தியாவசியமானது. உலக அளவில் வலிமை வாய்ந்த நாடாக 2047-ல்இந்தியா உருவெடுக்க, வரி செலுத்துவோரின் பங்களிப்பு நிச்சயம் உதவும். இந்த முயற்சியில் வெற்றிகாண ஜிஎஸ்டி அதிகாரிகள், தொழில் துறையினர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT