Last Updated : 26 Jun, 2022 03:31 PM

 

Published : 26 Jun 2022 03:31 PM
Last Updated : 26 Jun 2022 03:31 PM

புதுக்கோட்டை | திமுக விழாவில் 'வருங்கால முதல்வர்' கோஷம்: உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி

புதுக்கோட்டை அருகே கேப்பறையில் திமுக கொடியேற்றினார் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ.உடன் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பாத்தம்பட்டியில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் எய்ம்ஸ் செங்கலைப் போன்று வழங்கப்பட்ட பரிசுப் பொருளாலும், கேப்பறையில் நடைபெற்ற திமுக கொடியேற்று விழாவில் 'வருங்கால முதல்வர், தன்னிகரில்லா தலைவர்' போன்ற தொண்டர்களின் கோஷத்தாலும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நெகிழ்ச்சி அடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன் 26) புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இடங்களில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர், பாத்தம்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் எய்ம்ஸ் செங்கலைப் போன்று மரத்தால் வடிவமைக்கப்பட்ட பரிசுப் பொருளை திமுக நிர்வாகி ஒருவர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியதைப் பார்த்து அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

அதன்பிறகு, பேசிய உதயநிதி ஸ்டாலின், “ புதுக்கோட்டை வந்துவிட்டாலே எனக்கு புது தெம்பு வந்துவிடும். பாஜகவையும், அதிமுகவையும் போன்று ஒருவருக்கொருவர் அடிமையாக இருந்துவிடாமல், திராவிட மாடல் ஆட்சியைப் போன்று உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மணமக்கள் வாழ வேண்டும்" என்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாத்தம்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலைப் போன்று பரிசுப் பொருளை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கும் திமுகவினர்.

ஆலங்குடி அருகே கொடியேற்றுவிழா: அதன்பிறகு, பாத்தம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கேப்பறையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினத்தையொட்டி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஏற்பாட்டின்பேரில் 99 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார்.

இந்த இடத்தில் உதயநிதியை வரவேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. அப்போது, 'வருங்கால அமைச்சர், வருங்கால முதல்வர், இந்தியாவின் தன்னிகரில்லா தலைவர், இளந்தலைவர்' போன்று திமுக கொண்டர்கள் இடைவிடாது எழுப்பிய முழக்கத்தால் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், எம்.எம்.அப்துல்லா எம்.பி, வை.முத்துராஜா எம்எல்ஏ, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x