Published : 26 Jun 2022 07:12 AM
Last Updated : 26 Jun 2022 07:12 AM
சென்னை: அதிமுகவில் எந்தக் காலகட்டத்திலும் 3-வது நபர் தலையிடுவதை தொண்டர்கள் விரும்பமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரும், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தினர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணா தலைமையிலான ஒன்றுபட்ட திமுகவில் 1953-ல் வட்டச் செயலராக தன்னை இணைத்துக் கொண்டவர் தமிழ்மகன் உசேன்.
1954-ல் முதன்முதலாக எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கியவர். கட்சியில் படிப்படியாக வளர்ந்த தமிழ்மகன் உசேன், திமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியால் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியபோது, எம்ஜிஆருடன் இருந்துள்ளார்.
எம்ஜிஆர் கட்சி தொடங்கும்போது, கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலராக இருந்தார். இப்போது கட்சியின் உச்சபட்ச பதவியான அவைத் தலைவர் பதவிக்கு வந்துள்ளார்.
அதிமுகவில் பழனிசாமிதான் ஒற்றைத் தலைமைக்கு வர வேண்டும் என்ற தொண்டர்களின் குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது. அதிமுக தொண்டர்கள் யாருக்கும், ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது. விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றிருந்தால், அதை யார் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது.
கட்சியில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது பொதுக்குழு தான். ஒற்றைத் தலைமைதான் அதிமுகவுக்கு வேண்டும் என்பது பொதுக்குழு எடுத்த முடிவு. ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை செயல்வடிவம் பெறும்.
கட்சியில் பெரும்பாலானோர் பழனிசாமி தலைமையில்தான் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என்று விரும்பும்போது, அதற்கு ஆதரவு கொடுக்காமல், நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகுவதால், கட்சியினருக்குத்தான் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
பாஜக தலையீடு?
தொடர்ந்து, "அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சையில் பாஜக தலையிடுகிறதா?, திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது, "அதிமுகவில் எந்தக் காலகட்டத்திலும் 3-வது நபர் தலையிடுவதை தொண்டர்கள் விரும்பமாட்டார்கள். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அதிமுகவைக் கூறவில்லை. அவரது அண்ணன் மு.க.அழகிரியை மனதில் வைத்துதான் கூறி இருப்பார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT