Published : 24 Jun 2022 06:08 AM
Last Updated : 24 Jun 2022 06:08 AM

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 81 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற செயற்கை கால் உறுப்பு தான முகாமில் 81 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இலவசமாக வழங்கினார்.

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காயத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தீக்காயம் பற்றிய விழிப்புணர்வு காணொலியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து செயற்கை கால் உறுப்பு தான முகாமில் 81 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளை இலவசமாக வழங்கினார். அப்போது மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1973-ம் ஆண்டு 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காயப் பிரிவு தொடங்கப்பட்டது.

இங்கு தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தீக்காயம் அடையாமல் தடுத்தல், தீக்காயம் ஏற்பட்ட பின் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள், நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகள், சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளை ஆற்றுப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் சம்பந்தமாக தீக்காய விழிப்புணர்வு காணொலி வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல், தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்தி, தகுதியுடைய 81 பயனாளிகளுக்கு செயற்கை கால் உறுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சாந்திமலர், தீக்காயத் துறைத் தலைவர் டாக்டர் ரமாதேவி, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை பேராசிரியர் டாக்டர் திருநாவுக்கரசர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x