Published : 20 Jun 2022 06:19 AM
Last Updated : 20 Jun 2022 06:19 AM

பாபா ராம்தேவ் தலைமையில் அகமதாபாத்தில் யோகா தின ஒத்திகை: குஜராத் ஆளுநர், முதல்வர் பங்கேற்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சுவாமி பாபா ராம்தேவ் தலைமையில் யோகா தின ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாநில ஆளுநர் தேவவிரத், முதல்வர் பூபேந்திர பாட்டீல் ஆகியோருடன் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மேயர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சுவாமி பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஆளுநர் தேவவிரத், முதல்வர் பூபேந்திர பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக பதஞ்சலி யோக பீடம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 8-ம் ஆண்டு சர்வதேச யோகா தினம், ‘மனிதநேயத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் வரும் 21-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது.

தற்போது 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படுவதால், நாடு முழுவதும் வரலாற்று, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 75 நகரங்கள், 500 மாவட்டங்கள், 5 ஆயிரம் தாலுகாக்களில் யோகா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. பதஞ்சலி சேவகர்களின் வழிகாட்டுதலுடன் இவை நடைபெறும்.

யோகா தினத்தன்று செய்ய வேண்டிய தொடக்கப் பயிற்சிகள், ஆசனங்கள், பிராணாயாமம் குறித்த வழிமுறைகளை (புரோட்டோகால்) ஆயுஷ் அமைச்சகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அதன் அடிப்படையிலான ஒத்திகை நிகழ்ச்சி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வீராஞ்சலி மைதானத்தில் சுவாமி பாபா ராம்தேவ் தலைமையில் நேற்று காலை 5 மணி முதல் 7.30 வரை நடந்தது. இதில் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், முதல்வர் பூபேந்திர பாட்டீல் ஆகியோருடன் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மேயர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோக பீடம்-2 வளாகத்தில் 20-ம் தேதி (இன்று) அடுத்தகட்ட ஒத்திகை நிகழ்ச்சி, பாபா ராம்தேவ் தலைமையில் நடக்க உள்ளது. இங்கு 21-ம் தேதி (நாளை) சர்வதேச யோகா தின நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

பதஞ்சலி யோக பீடம் மகிளா பதஞ்சலி யோக சமிதியின் மத்திய முதன்மை பொறுப்பாளர் சாத்வி ஆச்சார்ய தேவ்பிரியா, சுவாமி பரமார்த்ததேவ், பாரத் ஸ்வாபிமான் மத்திய முதன்மை பொறுப்பாளர் பாய் ராகேஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x