Published : 19 Jun 2022 06:34 AM
Last Updated : 19 Jun 2022 06:34 AM
தூத்துக்குடி: ‘அக்னி பாதை திட்டம் 2047-ம் ஆண்டில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும்’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் சார்பில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த 8 பேருக்கு வ.உ.சி. விருதை வழங்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
தேசத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களை நாம் கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். அவர்கள் தேசத்துக்கு ஆற்றிய சேவைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இங்கு அமர்ந்திருப்பவர்கள் சனாதன தர்மத்தை உலகறியச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். நாம் இப்போது அந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம்.
இந்திய தேசம் எழுச்சி பெற்றுவருகிறது. நமது நாடு தற்போது தன்னுடைய சுய பலத்தை உணர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா உலகின் 150 நாடுகளுக்கு தேவையான உதவிகளைச் செய்துள்ளது. நாட்டில் உள்ள வளங்களைப் பாதுகாக்க வேண்டும். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நோக்கில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.
இளைஞர்களுக்காக வெளிப்படைத் தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ள அக்னி பாதை திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். புரட்சிகரமான இந்தத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் இளைஞர்களிடம் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் உருவாகும்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சுய தொழில் தொடங்கும் வகையில் பொருளாதார ரீதியாக அந்த இளைஞர் உயர்வார். அக்னி பாதை திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். நாட்டின் வளர்ச்சியில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும். 2047-ம் ஆண்டில் அக்னி பாதை திட்டம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும். எனவே, அக்னி பாதை திட்டம் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம் வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
விவேகானந்தா கேந்திர துணைத்தலைவர் சகோதரி நிவேதிதா தலைமை வகித்தார். தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தா தொடக்க உரையாற்றினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசக வாரிய உறுப்பினரும், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு, வ.உ.சி. பிறந்தநாள் விழாக்குழுத் தலைவர் மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், செயலாளர் செந்தில் ஆறுமுகம், காமராஜ் கல்லூரி நிர்வாகி நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தென்காசிக்கு சென்ற ஆளுநர் அங்கு நேற்று மாலையில் ஜோஹோ நிறுவன விழாவிலும், கடையம் அருகே கோவிந்தப்பேரியில் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய ஆளுநர், இன்று காலை தென்காசி அருகே ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT