Published : 19 Jun 2022 06:55 AM
Last Updated : 19 Jun 2022 06:55 AM
மதுரை: 4 ஆண்டுகள் திறமையாக ஆட்சி நடத்தியவருக்கு அதிமுக தலைமை பொறுப்பை மற்றவர் விட்டுத்தர வேண்டும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறினார்.
மதுரை பனங்காடியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பேசியதாவது:
அதிமுகவில் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் பொறுப்புகளைவிட கிளைச் செயலாளர் பொறுப்புதான் முக்கியம். கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் சொல்லக்கூடிய கருத்தைதான் மாவட்டச் செயலாளர்களாகிய நாங்கள் பொதுக்குழுகூட்டத்தில் எடுத்துக் கூறுவோம்.
நமக்கு திறமையான தலைமை வேண்டும். அதிமுகவையும், இரட்டை இலையையும் யார் காப்பாற்றுவாரோ அவரது தலைமையைத்தான் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியை திறமையாக வழிநடத்தக் கூடிய தலைமை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகள் சிறப்பாக நடத்தியவருக்குத்தான் அந்த வாய்ப்பு இருக்கிறது.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி பழனிசாமி. எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவில் பிரிவு ஏற்பட்டபோது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் பழனிசாமி. 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்தியவருக்கு மற்றவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும். ஜானகி பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்ததுபோல் திறமையானவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT