Published : 18 Jun 2022 07:40 AM
Last Updated : 18 Jun 2022 07:40 AM
திருவண்ணாமலை: திமுக அரசால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேற்று நடைபெற்றகோயில் குடமுழுக்கு விழாவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கலந்துகொண்டார். ஆரணிக்கு வரும் வழியில் காட்டாம்பூண்டி கிராமத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதால், ஏழை மாணவர்கள் பலர் மருத்துவம் படித்து வருகின்றனர். நிலத்தடி நீர் உயர வேண்டும் என்பதற்காக, குடிமராமத்து பணிகள் மூலமாக ஏரி, குளம், குட்டைகளை தூர் வாரப்பட்டது. தடுப்பணைகள் கட்டப்பட்டதால், மழை காலங்களில் நீரை தேக்கி நிலத்தடி நீர் உயர்வுக்கு காரணமாக உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் முதலில் ஆயிரம் ரூபாய், கரும்பு கொடுத்தோம். அடுத்தது ரூ.2,500 கொடுத்தோம். ஆனால், திமுக அரசு தந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளது.
திமுக அரசங்காத்தால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்றார்கள். ஆனால், கொடுக்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடியில் மக்களை ஏமாற்றினர்.
முதியோர் உதவித் தொகையை தடையின்றி வழங்கவில்லை என்றால், முதியோர்களை திரட்டி, அதிமுக போராட்டம் நடத்தும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி உள்ளது. திமுக இரட்டை வேடம் போடுகிறது. விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்” என்றார்.
பொதுச் செயலாளர் போஸ்டர்
பழனிசாமியை வரவேற்று திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்திருந்தனர். அதில், “எங்களின் ஒற்றை தலைமையே வருக வருக மற்றும் பொதுச் செயலாளரே வருக வருக” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான பேனர்களில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் படங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. பழனிசாமியை வரவேற்றபோது, ஒற்றை தலைமையே மற்றும் பொதுச் செயலாளரே என கட்சியினர் முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT