Published : 17 Jun 2022 06:28 AM
Last Updated : 17 Jun 2022 06:28 AM
சென்னை: சென்னையில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் வரும்23-ம் தேதி நடைபெறும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
2017-ல் நடந்த பொதுக்குழுவில் கட்சி விதிகளுக்கு புறம்பாக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இப்பதவிகளை அங்கீகரித்து, எந்த ஆவணத்தையும் தேர்தல் ஆணையம் கட்சிக்குத் தரவில்லை. கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல்ஆணையத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், சிவில் நீதிமன்றத்துக்குத்தான் அந்த உரிமை உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்பதவிகளை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்றுஎந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை. இந்த சூழலில், கட்சி விதிகளுக்கு புறம்பாக வரும் 23-ம் தேதிநடக்க உள்ள அதிமுக பொதுக்குழுகூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.
சென்னை பெருநகர 4-வதுஉரிமையியல் நீதிமன்றத்தில், நீதிபதி பிரியா முன்பு இந்த வழக்குவிசாரணை நேற்று நடந்தது. அப்போது இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தனர். ‘மனுதாரர் சூரியமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்பதால், உட்கட்சி விவகாரங்களில் தலையிட அவருக்கு உரிமைஇல்லை’ என்று கோரியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி சென்னை ஆயிரம்விளக்கு பகுதி அதிமுக செயலாளர் பாசறை எம்.பாலசந்திரன் நேற்றுராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு கொடுத்தார். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் சுற்றியுள்ளபகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT