Published : 17 Jun 2022 07:40 AM
Last Updated : 17 Jun 2022 07:40 AM

கோவில்பட்டி | பெற்றோர் ஆசிரியர் சங்கத் தேர்தல் தொடர்பாக ஜாதி ரீதியாக மாணவரிடம் பேசிய 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

குளத்தூரில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளி.

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் தேர்தல் தொடர்பாக மாணவரிடம் ஜாதி ரீதியாக பேசிய உரையாடல் சமூகவலைதளங்களில் பரவியதை தொடர்ந்து 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அரசு பொதுத்தேர்வு தொடங்கியதால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பெற்றோர் ஆசிரியர் சங்கத் தேர்தல் தொடர்பாக இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றும் கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா உதவியுடன் ஒரு மாணவரிடம் ஜாதி ரீதியாக செல்போனில் பேசியுள்ளார். இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், ‘‘உங்கள் ஊரைச் சேர்ந்த மாணவர்களை இப்பள்ளியில் சேர்க்க வேண்டாம் என கூறுகின்றனர். தற்போது பெற்றோர் ஆசிரியர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்குள்ள சிலர் ஒரு சமூகத்தை சேர்ந்தவரை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக கொண்டுவர முயற்சி எடுக்கின்றனர்.

அதனால் உங்கள் ஊரில் உள்ளவர்களை தேர்தலில் பங்கேற்கச் சொல்ல வேண்டும். ஒரு சமூகத்தின் கையில் அரசு பள்ளி சென்று விடக்கூடாது. அனைத்து தரப்பு மாணவர்களும் இங்கு வந்து பயில வேண்டும்’’ என அந்த ஆசிரியர் கூறுகிறார். அதற்கு அந்த மாணவர் அனைவரும் சமம் தானே என சொல்கிறார். இ்த்துடன் அந்த உரையாடல் முடிகிறது.

இது தொடர்பாக உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, ஆசிரியை மீனா ஆகியோரிடம் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். பின்னர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் வி.பாலமுருகன் கூறும்போது, ‘‘ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது பள்ளி வளாகம். ஆசிரியை ஜாதி ரீதியாக பேசியது மாணவரிடம் துவேஷத்தை விதைப்பது போல் உள்ளது.

பள்ளி கண்காணிப்புக் குழு இருப்பது போல், ஆசிரியர்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் ஜாதி ரீதியாக பேசுபவர்கள், குழுவாக சேர்ந்து செயல்படும் ஆசிரியர்களை இக்குழுவினர் கண்டறிந்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x