Published : 13 Jun 2022 06:36 AM
Last Updated : 13 Jun 2022 06:36 AM

பெண் விடுதலைக்கு அடித்தளமிட்டது திராவிட இயக்கம்: தூத்துக்குடியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கருத்து

தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக மகளிரணியினருக்கான திராவிட இயக்க பயிற்சி பாசறையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பேசினார். உடன் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் அணியினருக்கான திராவிட இயக்க வரலாறு பயிற்சி பாசறை நேற்று நடைபெற்றது.

தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெசி பொன்ராணி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வேலம்மாள் வரவேற்றார்.

திமுக கலை இலக்கிய பகுத் தறிவு பேரவை துணைத்தலைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. திராவிட இயக்க வரலாறு குறித்து பயிற்சி நடத்தினார். அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில்தான் கரோனா காலத்தில் வீடு தேடி உணவு, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் வந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பயிற்சி பெற்ற 26 பேரை அர்ச்சகராக நியமித்தார்.

பெண் விடுதலை என்பது ஆண்களையும் உள்ளடக்கியது தான். அதற்கான விதையை தந்தது திராவிட இயக்கம். பெண்கள் பலர் உள்ளாட்சி பொறுப்புகளில் இருப்பதற்கு அடித்தளம் போட்டவர் கருணாநிதி.

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால் தன்மானத்தோடு நடைபோட முடியும். அதனால்தான் அரசு பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு அளித்து வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப் பாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘‘ சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது திராவிட இயக்கம். எல்லா மதமும் ஒன்றுதான். தன்னம்பிக்கையை மேம்படுத்த திராவிட இயக்க வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், துணைச் செயலாளர் ஆறுமுகபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x