Published : 03 Jun 2022 06:06 AM
Last Updated : 03 Jun 2022 06:06 AM

சோளிங்கரில் தெருவில் விளையாடியபோது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

நிதிஷ் வர்மன்.

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் உள்ள அர்ஜூனா ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர். இவருடைய மகன் நிதிஷ் வர்மன் (8). இவர், கடந்த 30-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய்கள் திடீரென சிறுவன் நிதிஷ் வர்மனை துரத்தி கடித்ததில் கால் பகுதியில் 2 இடங்களில் மற்றும் இடுப்பு பகுதியில் ஓரிடத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.

நாய்கள் துரத்திக் கடித்ததில் கூச்சலிட்ட சிறுவனை அவ் வழியாகச் சென்ற சிலர் மீட்டனர். பின்னர், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது சிறுவன் நலமுடன் இருக்கும் நிலையில், சிறுவனை நாய்கள் துரத்தி கடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சோளிங்கர் நகராட்சி 11-வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்த நிலையில் நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. நாய்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சோளிங்கர் நகராட்சி ஆணையாளர் பரந்தாமனிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘‘தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக கால்நடை மருத்துவ துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம். மருத்துவர் வந்ததும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அதை 3 நாட்களுக்கு பராமரித்து வெளியில் விடப்படும். இதற்காக, நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இடம் ஒன்றையும் தேர்வு செய்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x