Published : 01 Jun 2022 06:29 AM
Last Updated : 01 Jun 2022 06:29 AM
சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் தோல்வி விரக்தியால், திமுக அரசு மீது எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.
தமிழக அரசியலில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தேவிட்டது. சசிகலாகூட இதை கூறியிருக்கிறார். ஆனால், தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அவதூறு பேட்டி அளித்து வருகிறார்.
கடந்த ஓராண்டு காலத்தில் திமுக அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வித் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நான் முதல்வன் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், கரோனா நிவாரண நிதி என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
ஆனால், பழனிசாமி இந்த உண்மைகளை மறைத்து, அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். அதிமுக ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப்போய் இருந்தது. திமுக ஆட்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிந்துள்ளது.
சாதி, மதச் சண்டைகள் இல்லாத, அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அதிமுகவின் கடைசி ஓராண்டில் 1,695 கொலைகள், 146 கொள்ளைகள், 30 கூலிப்படை கொலைகள், 16 துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இவையெல்லாம் திமுக ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளன.
அதிமுகஆட்சியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழிக்க கொண்டுவரப்பட்ட சட்டம் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்பட்டதால், அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக அரசு முனைப்புடன் உள்ளது. ஆன்லைன் ரம்மியை ஒழிக்க உறுதியான சட்டம் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு போதைப் பொருட்கள் நடமாட்டம் இருந்தது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
அதிமுக ஆட்சியில் காவல் துறை தலைவராக இருந்தவர் மீதே வழக்கு பாய்ந்தது. தற்போது கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் 813 பெயரில் இருந்த போலி வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
ஆனால், எதிர்கட்சித் தலைவர் குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தி பேசி வருகிறார். திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT