Last Updated : 31 May, 2022 11:28 PM

 

Published : 31 May 2022 11:28 PM
Last Updated : 31 May 2022 11:28 PM

திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டு வீரனின் நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 13ம் நுாற்றாண்டு வீரனின் ‘நடுகல்’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லை மாவட்ட நிர்வாகம் ஆவணப்படுத்தி, பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பிரபு, மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பகுதியில் களஆய்வு மேற்கொண்ட போது பழமை வாய்ந்த நடுகல்லை ஒன்றை அவர்கள் கண்டறிந்தனர்.

இது குறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது, “பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகிற்கு எடுத்துக் கூறும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடுகற்கள் ஆங்காங்கே கண்டறியப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுகல் என்பது வெறும் கல் மட்டும் அல்ல. அது பண்பாட்டின் வெளிப்பாடு. அக்காலத்தைய மக்களின் நம்பிக்கை, நன்றி பாராட்டும் செயல், உரியவர்களுக்கு அளிக்கும் வெகுமதி என்றே நாம் அதனை அணுக வேண்டியுள்ளது. தமிழர்களின் அறக்கோட்பாட்டிற்குச் சான்று கூறுவதிலும் நடுகற்கள் முக்கியப் பங்காற்றுகிறது. நடுகற்களானது, ‘வீரன்கல், வீரக்கல், நடுகல்’ எனவும் ‘நினைவுத் துாண்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

வீரயுகக் காலம் என்று அழைக்கப்படுகின்ற காலங்களில் ஏற்பட்ட போர்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளதனை செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடியும்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜெயபுரம் பெரிய ஏரிக்கோடியில் ஏற்கனவே 2017-ம் ஆண்டு மிகப்பெரிய நடுகல் கோட்டம் மற்றும் ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்து கல்வெட்டு ஒன்றினை கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தியுள்ளோம். தற்போது அப்பகுதியில் களஆய்வு மேற்கொள்ளும் போது ஜெயபுரம் ஊர்மக்கள் அளித்த தகவலின் பேரில், சந்திரபுரம் சின்ன ஏரியில் இருந்து வரும் கால்வாய் ஓரம் ஒரு நடுகல் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்.

இந்த நடுகல்லானது 4 அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட வெள்ளை நிற பலகைக் கல்லில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் மேல் நோக்கிய கொண்டையும் நீண்ட காதுகளில் குண்டலமும், கழுத்தணியும் அணிந்து காணப்படுகின்றார். அவரது முதுகில் அம்புகள் நிறைந்த கூடினையும் வலது கையில் வில்லினையும் இடது கையில் அம்பினையும் ஏந்தி சண்டையிடும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். வீரனின் இடுப்புப் பகுதியில் பெரிய போர் வாள் வைத்திருப்பதால் இவர் சிறந்த வீரர் என்பதை சிற்பி விளக்க முற்படுகின்றார்.

இவ்வீரன் இப்பகுதியில் நடைபெற்ற பூசலில் (சண்டையில்) வீரமரணம் அடைந்தவராவார். நடுகல்லில் இவ்வீரரின் தலை, மார்பு, வலது கால் ஆகிய பகுதிகளில் எதிரிகள் எய்த அம்புகள் வலுவாகப் பாய்ந்து உயிர் துறந்ததை விரிவாக விளக்கியுள்ளனர். நடுகல்லில் உள்ள சிற்ப வேலைப்படுகளை வைத்து இது கி.பி. 13-ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.

சந்திரபுரம் பகுதியானது பெரிய போர் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியாகும் என்பது இவ்வூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு நமக்கு தெளிவுபடுத்துகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த நடுகல் இப்பகுதியின் வரலாற்றுப் பதிவுகளைத் தாங்கிய ஆவணம் என்பதால் இதனைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.”இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x