Published : 31 May 2022 07:38 PM
Last Updated : 31 May 2022 07:38 PM

“துர்நாற்றத்தில் தூங்கா நகரம்... தூய்மைப் பணியாளர்கள் கோருவதை உடனே செய்க” - இபிஎஸ்

சென்னை: "மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்கடந்த 3 நாட்களாக 28 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தூங்கா நகரான மதுரையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த இந்த திமுக அரசு, தூய்மைப் பணியாளர்களுக்காகவும் பல அறிவிப்புகளை தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு ஆட்சியில் இருந்தபொழுது தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

குறிப்பாக, கரோனா நோய்த் தொற்றின்போது பிரதிபலனை எதிர்பார்க்காமல் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் அவர்களுக்கு உணவு, மளிகைப் பொருட்கள், உடை முதலானவற்றை வழங்கியதுடன், அவர்களுடைய பணியை அதிமுக அரசு மரியாதையுடன் சிறப்பித்தது. இதை தமிழக மக்களும், தூய்மைப் பணியாளர்களும் நன்கறிவார்கள்.

ஆனால், இந்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆளும் திமுக கவுன்சிலர்களால் தூய்மைப் பணியாளர்கள் சொல்லண்ணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள்.

குறிப்பாக, மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக 28 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதால், தூங்கா நகரான மதுரை, வாரப்படாத குப்பைகள், தூர் வாரப்படாத சாக்கடை கால்வாய்கள், மூக்கைப் பிடித்துக்கொண்டு நடக்கும் மக்கள் என, காட்சி அளிக்கிறது. குறிப்பாக, மதுரை ஆட்சியர் அலுவலகம், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சாலைகள் என அனைத்தும் இன்று குப்பைகளால் நிரம்பி வழிகிறது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு முன்னுரிமை தரப்படும், இதன்மூலம் தலைமுறை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி விடுதலையும், மாற்று வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண். 281-ல் குறிப்பிட்டுள்ளது.

இன்று மதுரையில் தங்கள் 28 கோரிக்கைகளுக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளில் ஒன்று, விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண். 283-ன்படி தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிர் இழக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பது. ஆனால், இந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததால், அதை நிறைவேற்றக் கோரி தூய்மைப் பணியாளர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், அதே துறையில் காலியாக உள்ள பதவிகளில் கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்கப்படும் (வா.எண். 284) மற்றும் அனைத்து தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் (வா.எண் 285) என்று திமுகவினர் தூய்மைப் பணியாளர்களுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

தற்போது, மதுரை மாநகராட்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒருசில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்; 2006 முதல் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்; அரசு அறிவித்த முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகை ரூ. 15,000/-த்தை வழங்க வேண்டும் என்றும்; மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினச் சம்பளமாக அறிவித்த ரூ. 625/-ஐ வழங்க வேண்டும் போன்றவை ஆகும்.

இந்த திமுக அரசு, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, தூய்மைப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தாலே இன்று இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.

எனவே, இனியும் கால தாமதம் செய்யாமல், தூய்மைப் பணியாளர்களுக்காக திமுக அறிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை நேரில் அழைத்து, கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x