Published : 31 May 2022 06:11 AM
Last Updated : 31 May 2022 06:11 AM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்சி - சிதம்பரம் இடையிலான 134 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் திருச்சி - கல்லகம் இடையிலான 38.70 கி.மீ நீள சாலையில் கல்லக்குடி என்ற இடத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி திறக்கப்படவுள்ளது.
கல்லகம் - மீன்சுருட்டி இடையிலான 59.74 கி.மீ நீள சாலையில் மனகெதி என்ற இடத்தில் கடந்த 27-ம் தேதி சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இந்த இரு சுங்கச்சாவடிகளையும் சேர்த்து தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இன்னும் 7 சுங்கச்சாவடிகள் திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் ஏற்கெனவே சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிப்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 மூடப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் நெடுஞ்சாலைத் துறை கூறியிருந்தது.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அவர்களும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி விதியை செயல்படுத்தி கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும் என்று கடந்த மார்ச் 22-ஆம் தேதி அறிவித்திருந்தார். அவரது கெடு முடிய இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சுங்கச்சாவடிகளை மூடுவதற்காக தொடக்கக்கட்ட பணிகளைக் கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தரப்படவில்லை.
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க தேசிய நெடுஞ்சாலைகள் என்றாலே, அவை கட்டணச் சாலையாகத் தான் இருக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2,000 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் மொத்தமுள்ள 5,324 கீ.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 5,200 கி.மீ நீள சாலைகள், அதாவது 97.67 சதவீத சுங்கச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் தேசிய அளவில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 51,019 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 29,666 கி.மீ நீள சாலைகளுக்கு, அதாவது 19.64 சதவீத சாலைகளுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பெரும் அநீதி. இந்த அநீதியை களைவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் என்பது மக்களை கசக்கிப் பிழிவதாக இருக்கக்கூடாது. எனவே, தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். ஏற்கெனவே உள்ள சுங்கச்சாவடிகளையும் 60 கி.மீக்கு ஒன்று என்ற அளவில் அரசு முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT