Published : 30 May 2022 07:15 AM
Last Updated : 30 May 2022 07:15 AM
சென்னை: அண்மைக்காலமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் அதிகபணம் சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்றபேராசையில் பலர் இதை விளையாடி, பணத்தை இழக்கின்றனர்.
மாணவர்களும்கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி, வாழ்வைப் பறிகொடுக்கின்றனர். இளைஞர்கள், மாணவர்கள், போலீஸார் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தைஇழந்து, தற்கொலை செய்துகொண்டுள்ளர். இதனால், இந்த விளையாட்டை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டு தொடர்பாக ‘இணையத்தில் நடக்கும் மற்றுமொரு மிகப் பெரிய மோசடி‘ என்ற தலைப்பில் டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்னும் மோசடி சமீபகாலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டில் முதலில் நாம் வெற்றி பெறுவது போன்று ஆசையைத் தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதைப் பார்த்து, யாரும் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
இது ஆன்லைன் ரம்மி இல்லை. மோசடி ரம்மி விளையாட்டு. இதை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்சினை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவுசெய்து யாரும் ஈடுபட வேண்டாம். இவ்வாறு சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT