Published : 23 May 2022 07:12 AM
Last Updated : 23 May 2022 07:12 AM

சுகாதார துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 13,267 பேருக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 13,267 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் ஊதிய உயர்வுக்காக முதல்வரையும், என்னையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 28,982 பேருக்கு 30 சதவீத ஊதிய சலுகைகள் அளித்து, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.89 கோடியே 82 லட்சம் கூடுதலாக செலவாகியுள்ளது.

மற்றவர்களும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்படி 13,267 பேருக்குஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு

தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மகளிர், தங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் எங்கும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற மகளிர் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது இல்லை. எனினும், இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

மருத்துவத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, மானியக் கோரிக்கையில் 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமின்றி, தினமும் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஒன்று முதல் 6 வயது குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்நீலகிரியில் தொடங்கி வைத்துள்ளார். ஊட்டச் சத்துக்குறைபாடுகளை போக்க, தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் ஈரோடு அரசு மருத்துவமனை, கரூர்அரசு மருத்துவமனை, சென்னைஅரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 3 புனர்வாழ்வு மையங்களை, ரூ.44 லட்சம் செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு

தமிழகத்தில் பல் மற்றும் வாய் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் வகையில், தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் 29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவுதொடங்கப்பட உள்ளது. இதற்கான மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.87 லட்சம் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x