Published : 19 May 2022 06:04 AM
Last Updated : 19 May 2022 06:04 AM
சென்னை: மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘திட்டங்களின் செயல்பாடுகள், பணிகளை விரைவுபடுத்தி, குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். திட்ட செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும். இத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி, ஊராட்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வேளாண்மை, உழவர் நலம், பள்ளிக்கல்வி, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், பி.ஆர்.நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ப.ரவீந்திரநாத் குமார், நவாஸ்கனி, ஆர்.எஸ்.பாரதி, ஏ.நவநீதகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், என்.எழிலன், டிகேஜி நீலமேகம், எம்.பூமிநாதன், அசன் மவுலானா, செங்கோட்டையன், தலைமைச் செயலர் இறையன்பு, ஊரக வளர்ச்சிச் துறை செயலர் அமுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT