Published : 14 May 2022 07:12 AM
Last Updated : 14 May 2022 07:12 AM

தாய்மொழியை சரியாக படிக்காமல் பிறமொழியை நிந்திப்பது மொழிப் பற்றாகிவிடாது - புதுவை கம்பன் விழாவில் ஆளுநர் தமிழிசை கருத்து

புதுச்சேரி கம்பன் விழா மலரை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் வெளியிட முதல்வர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார். அருகில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், அமைச்சர் நமச்சிவாயம், கம்பன் கழகச் செயலாளர் சிவக்கொழுந்து, மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: தாய்மொழியை சரியாக படிக்காமல், பிறமொழியை நிந்திப்பது எந்த விதத்திலும் மொழிப்பற்றாகிவிடாது என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுவை கம்பன் கழகம் சார்பில் 55-வது கம்பன் விழா நேற்று கம்பன் கலையரங்கில் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:

புதுவையில் நல்லாட்சி நடக்கிறது. கம்பன் கழகத்தில் முதன்முறையாக தமிழில் பேசும் ஆளுநர் பங்கேற்றுள்ளதாக என்னைக் கூறினர். பெயரில் மட்டுமல்ல; உயிரிலும் தமிழைப் பெற்றவள் நான். எத்தனை சாமிகள் வந்தாலும், ரங்கசாமி இங்கு இருப்பது சிறப்பு. கம்பன், கம்ப ராமாயணத்தை எழுதிமுடித்துவிட்டு ஸ்ரீரங்கத்தில் ரங்கசாமியிடம்தான் அரங்கேற்றினார். அதனால், ரங்கசாமியே இங்கு நிரந்தரமாக முதல்வராக இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

கம்பனும் பிற மொழியும்

வடமொழியை கற்று, வால்மீகியின் வடமொழி ராமாயணத்தைப் படித்து, தமிழர்கள் பெருமைப்படும் வகையில் கம்பன் ராமாயணத்தை படைத்தார். ‘பிற மொழியை கற்பதால் என் தமிழ் எந்தவிதத்திலும் கரைந்து விடாது’ என்பதை கம்பன் உணர்த்துகிறார்.

தாய்மொழியை உயிரினும் மேலாக படிக்க வேண்டும். தாய்மொழியை சரியாக படிக்காமல், பிறமொழியை நிந்திப்பது எந்தவிதத்திலும் மொழிப் பற்றாகி விடாது. என் தாய்மொழியில் வளம் பெற்றுள்ளேன், பக்கபலமாக மற்றொரு மொழியைக் கற்கிறேன் என்பதைத்தான் புதிய கல்விக்கொள்கை சொல்கிறது. புதுவையில் தமிழுக்கு எந்தவிதத்திலும் தலைகுனிவு ஏற்படுவதை அரசு ஒப்புக்கொள்ளாது என்றார்.

இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, கம்பன் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான சிவக்கொழுந்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

‘புரிந்தவர்களுக்கு புரியட்டும்'

புதுவை கம்பன் விழாவுக்கு தலைமை தாங்கி பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தனது பேச்சின்போது, “அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி யார் முதல்வராக இருந்தாலும், கம்பன் கழகத்தின் புரவலராக இருப்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. இந்த மேடை, ஏணியில் ஏற்றி வைக்கும் மேடை. இதை, குறிப்பாக மேடையில் உள்ள ஒருவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். புரிந்தவர்களுக்கு புரியட்டும், புரியாதவர்களுக்கு புரியாமல் போகட்டும்.

பல நகரங்களில் கம்பன் கழக விழாக்கள் 3 நாட்கள், 2 நாட்கள் நடைபெறும். தற்போது விழா நடைபெறும் நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால், புதுவை மக்கள் கம்பன் விழாவை கைவிடவில்லை. ஆயிரம் ஆண்டாக கம்பனை கொண்டாடுகிறோம்.

உலகில் வேறு எந்த கவிஞரையாவது இப்படி கொண்டாடியதாக வரலாற்றுச் சான்று இல்லை. படித்தவர் மனதையெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் கொள்ளையடித்ததால்தான் கம்பனை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து கொண்டாடுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x