Published : 11 May 2022 05:54 AM
Last Updated : 11 May 2022 05:54 AM

காவல் நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் சகோதரரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் கடந்த மாதம் 18-ம் தேதி கெல்லீஸ் சிக்னல் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த பட்டினப்பாக்கம் விக்னேஷ் (25), அவரது நண்பர் திருவல்லிக்கேணி சுரேஷ் (28) ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த விக்னேஷ் மறுநாள் உயிரிழந்தார். அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது, பிரேதப் பரி சோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விக்னேஷ் மரணம் தொடர்பாக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமைக் காவலர் முனாப், காவலர் பவுன்ராஜ், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார், ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகிய 6 பேர் கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் வினோத்தை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

போலீஸார் கேட்டுக்கொண்டபடி, விக்னேஷ் மரணம் தொடர்பாக தனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விக்னேஷ் உயிரிழப்பு விவகாரத்தை மூடி மறைக்க ரூ.1 லட்சம் பேரம்பேசப்பட்டதாக எழுந்த புகார் குறித்தும், விக்னேஷ் விவகாரம் தொடர்பாக யார் யார் தொடர்பு கொண்டனர் என்பது போன்ற விவரங்களையும் வாக்குமூலமாக வீடியோவாகவும், எழுத்து மூலமாகவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சிலரை நேரில் அழைத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x