Published : 06 May 2022 06:14 AM
Last Updated : 06 May 2022 06:14 AM
திருநெல்வேலி: நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த ஷேக் மைதீன் மகன் காதர் மைதீன்(35), ஆட்டோ ஓட்டுநர். இவர், தனது ஆட்டோவில் மனைவி பக்கிராள் பானு(32), 2 குழந்தைகள் மற்றும் பக்கிராள் பானுவின் சகோதரி ரஹ்மத் பீவி(28) ஆகியோருடன், நேற்று காலை திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தார்.
அம்பாசமுத்திரம் - திருநெல்வேலி பிரதான சாலையில் விரிவாக்கப் பணிக்காக பத்தமடை அருகே உள்ள திருப்பத்தில் சாலையோரம் நின்ற மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்தை காதர் மைதீன் குடும்பத்தினர் கடந்து சென்றபோது, ஆட்டோ மீது திடீரென மரம் விழுந்தது.
ஆட்டோ நசுங்கியதால் காதர் மைதீன், ரஹ்மத் பீவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தனர். பக்கிராள் பானுவும்,2 குழந்தைகளும் லேசான காயத்துடன் தப்பினர். அவர்கள் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
காதர் மைதீனின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், ஏஎஸ்பி மதிவாணன், கோட்டாட்சியர் சிந்து, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சித் தலைவி ஆபிதா உள்ளிட்டோர் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
200 பேர் மறியல்
இதற்கிடையே, பத்தமடை முஸ்லிம் ஜமாத் தலைவர் மலுக்காமலி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அம்பாசமுத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ‘உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கவனக்குறைவாக செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, 3 மணி நேரம் நீடித்த மறியல் கைவிடப்பட்டது. விபத்து குறித்து பத்தமடை போலீஸார் விசாரிக்கின்றனர்.
முதல்வர் நிவாரணம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: விபத்தில் உயிரிழந்த காதர் மைதீன், ரஹ்மத் பீவி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் விபத்து இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT