Published : 05 May 2022 06:36 AM
Last Updated : 05 May 2022 06:36 AM

ஆவடி காவல் ஆணையரகத்திடம் துப்பறியும் பணிக்காக 3 மோப்ப நாய்கள் ஒப்படைப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தால், ஆவடி காவல் ஆணையரகத்திடம் ஒப்படைக்கப்பட்ட மோப்ப நாய்கள் ரீட்டா, டோனி.

ஆவடி: துப்பறியும் பணிக்காக ஆவடி காவல் ஆணையரகத்திடம் 3 மோப்ப நாய்களை, நேற்று முன்தினம் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் ஒப்படைத்தது.

சென்னை பெருநகர காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய இரு காவல் ஆணையரகங்கள் கடந்த ஜனவரி 1-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தன.

இதில், ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் செவ்வாப்பேட்டை, புழல், மாங்காடு உள்ளிட்ட திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 25 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சந்தீப் ராய் ரத்தோர் காவல் ஆணையராக பணிபுரிந்து வரும் இந்த ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதாகக் கண்டுபிடிக்க துப்பறியும் மோப்ப நாய்கள் தேவைப்பட்டன.

ஆகவே, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திலிருந்து டோனி, ரீட்டா, ஜான்சி ஆகிய 3 மோப்ப நாய்கள் நேற்று முன்தினம் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து இந்த மோப்ப நாய்களை துப்பறியும் பணிக்காக ஆவடி காவல் ஆணையரகத்திடம் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் ஒப்படைத்தது.

மோப்ப நாய்களை காவல் ஆணையர் சந்தீர் ராய் ரத்தோர் பார்வையிட்டார். இந்த மோப்ப நாய்களில் ரீட்டா, ஜான்சி ஆகியவை வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியிலும், டோனி கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படும் என, ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x