Published : 02 May 2022 07:12 AM
Last Updated : 02 May 2022 07:12 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் ரயில்வே இருவழிப்பாதை பணிக்காக பேயன்குழி இரட்டைக்கரை கால்வாய், நெய்யூர் இரணியல் கால்வாய் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு 25 ஆயிரம் ஏக்கரில் இருபோக வேளாண் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது.
கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டுள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், இரணியல் பகுதிகளில் இப்பணிகள் நடந்து வருகின்றன. இருவழிப்பாதை அமைக்கும் பொருட்டு தண்டவாளப் பகுதியின் குறுக்கே வரும் பாசன கால்வாய்களான பேயன்குழி இரட்டைக்கரை கால்வாய், நெய்யூர் இரணியல் கால்வாய், பள்ளியாடி பட்டணம் கால்வாய் ஆகியவற்றை உடைத்து பணி கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பேயன்குழி, நெய்யூர் கால்வாய்களில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் பணிகளைத் தொடங்கி 4 மாதத்துக்குள் விவசாயத்துக்கு பாதிப்பின்றி முடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதுபோல் பள்ளியாடியில் அடுத்த ஆண்டு இருவழிப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட இருந்தது. இப்பணிகள் நடைபெறும்போது வேளாண் பாசனத்துக்கு கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் வழங்க முடியாத காரணத்தால் இரட்டைக்கரை, இரணியல் கால்வாய்களின் தண்ணீரால் பயன்பெறும் விவசாயிகள் வரும் கன்னிப்பூ சாகுபடியை மேற்கொள்ள வேண்டாம் என குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவித்திருந்தார்.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு பாசனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் முன்னறிவிப்பின்றி நெய்யூர், பேயன்குழி கால்வாய்களை உடைத்து ரயில்வே துறையினர் இருவழிப்பாதை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
இதனால் இரட்டைக்கரை, நெய்யூர் கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் கன்னிப்பூ மட்டுமின்றி அடுத்து வரும் கும்பப்பூ சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் வேளாண் பிரதிநிதிகள் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை மற்றும் பலர் கால்வாய் உடைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். தண்டவாளம் அமைக்கும் பணிகளை ஓராண்டுவரை இழுத்தடிக்காமல் வேளாண் பாசனம் பாதிக்காதவாறு பணிகளை விரைந்து முடித்து விவசாயத்துக்கு கடைமடை பகுதிவரை தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேளாண் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT